

திருப்பதிக்கு சுற்றுலா சென்று, ஆந்திர செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட 10 தமிழர்களும், தமிழக வழக்கறிஞர்கள் முயற்சியால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''தூத்துக்குடி மாவட்டம், அம்பலச்சேரி கிராமத்தைச் சேர்ந்த 10 பேர் ஆன்மிக சுற்றுலா சென்றனர். திருவண்ணாமலையில் இருந்து திருப்பதிக்கு செல்லும் வழியில், சித்தூர் மாவட்டம் ரங்கம்பட்டி சுங்கச்சாவடியில், ஆந்திர செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு வனத்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 16-ம் தேதியில் இருந்து அவர்கள் சித்தூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர்களது உறவினர்கள் அரசுக்கு கோரிக்கைவிடுத்தனர்.
இதையடுத்து, அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். தொடர்ந்து, அரசு வழக்கறிஞர்கள் அருள் மற்றும் முகமது ரியாஸ் ஆகியோர் திருப்பதிக்கு அனுப்பப்பட்டனர்.
சிறையில் உள்ள 10 தமிழர்களை ஜாமினில் விடுவிக்க அரசு வழக்கறிஞர்கள், திருப்பதியில் உள்ள வழக்கறிஞர்களுடன் இணைந்து நடவடிக்கை எடுத்தனர். பின்னர் திருப்பதி 5-வது கூடுதல் குற்றவியல் அமர்வு நீதிமன்றம் 10 பேரையும் ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.