

கரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், தூத்துக்குடி மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், கடந்த சில வாரங்களாக பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கூட்டம், கூட்டமாக வந்து ஆட்சியர் அலுவலகத் தில் மனு அளிக்கின்றனர்.
முக்கியமான பிரச்சினைகளாக இருந்தால் மட்டுமே அதிகாரிகள் நேரடியாக மனுக்களை வாங்குகின்றனர். இல்லையெனில், ஆட்சியர் அலுவலக வரவேற்பறையில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மனுக்களை பொதுமக்கள் போட்டுச் செல்கின்றனர்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள், ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்றுவந்ததால், பலத்த பாதுகாப்புஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆட்சியர் அலுவலகத்துக்குள் செல்ல யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனால், மனுக்கள் பெட்டி ஆட்சியர் அலுவலகத்தின் பிரதான வாயிலில் வைக்கப்பட்டது. கேட்டுக்கு வெளியே நின்றபடியே பெட்டியில் மனுக்களை பொதுமக்கள் போட்டுச்சென்றனர்.
இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் அளித்த மனுவில், `மீளவிட்டான் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வரும் அரசு நிலத்தில் கிறிஸ்தவ தேவாலயம் அமைக்க பள்ளி நிர்வாகம் முயற்சி செய்தது.இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், ஆலயம் அமைக்கும் பணிநிறுத்தப்பட்டது. தற்போது, தூத்துக்குடி வட்டாட்சியரின் உதவியுடன் மீண்டும் ஆலயம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சட்டத்துக்கு புறம்பாக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.
பொட்டலூரணி மக்கள் அளித்த மனுவில், பொட்டலூரணி அருகே வடக்கு காரசேரியில் மீன் எண்ணெய் மற்றும் மீன் உணவு தயாரிக்கும் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்துக்கு தேவையான அழுகிய மீன்களை பொட்டலூரணி வழியாக எடுத்துச் செல்கின்றனர். ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரை வயல்வெளி, வாய்க்கால், குளங்களில் கொட்டிச் செல்கின்றனர். சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. நிறுவனத்தில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
கோவில்பட்டி அருகேயுள்ள லிங்கம்பட்டி ஊராட்சி கலைஞர் நகர்மக்கள் அளித்த மனுவில், `கலைஞர் நகருக்கு குடிநீர், சாலை வசதி, மின்சார வசதி கிடைக்கச் செய்ய வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.