

பல நூறாண்டுகள் பழமையான ‘டவுன்ஹால்’ கட்டிடத்திலிருந்து சிந்தாமணி காவலர் குடியிருப்பு பகுதிக்கு கோட்டைகாவல் நிலையங்கள் இடம் மாற உள்ளன. இதற்காக ரூ.2.67 கோடி செலவில் லிப்ட் வசதியுடன் 5 தளங்களைக் கொண்ட கட்டிடம் கட்டப்பட உள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சியின்போது திருச்சி மாவட்டத்தில் உருவாக்கப்பட்ட காவல் நிலையங்களில் முக்கியமானது கோட்டை காவல் நிலையம். தற்போதைய திருச்சி மாநகரின் பெரும்பாலான பகுதிகள், அக்காலகட்டத்தில் இந்த காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில்தான் இருந்து வந்துள்ளன.
மலைக்கோட்டை அருகேயுள்ள பல நூறாண்டுகள் பழமை வாய்ந்த, வரலாற்றுச் சிறப்புமிக்க ‘டவுன் ஹால்’ கட்டிடத்தில் இன்றளவும் இக்காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.
இட நெருக்கடியால் அவதி
இந்த வளாகத்தில் தற்போது கோட்டை சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் மட்டுமின்றி கோட்டை குற்றப்பிரிவு, அனைத்து மகளிர் காவல் நிலையம், போக்குவரத்து ஒழுங்கு பிரிவு, (வடக்கு) போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆகியவையும் செயல்பட்டு வருகின்றன. ஒரே வளாகத்தில் பல காவல் நிலையங்கள் அமைந்துள்ளதாலும், மாநகரின் பிரதான பகுதிகளை உள்ளடக்கி இருப்பதாலும் வழக்கு தொடர்பாக இங்கு வரக்கூடியவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
ஆனால் அதற்கேற்ப போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இங்கு இல்லை. மேலும், வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கும் இங்கு போதிய இடமில்லாததால் காவலர்களும், பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே கோட்டை காவல் நிலையங்களுக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என திருச்சி மாநகர காவல்துறை சார்பில் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
அரசு ஒப்புதல், நிதி ஒதுக்கீடு
இதை ஏற்று தற்போது அங்கு செயல்படும் காவல் நிலையங்களுக்கு புதிய கட்டிடம் கட்ட தமிழக அரசு ஒப்புதல் அளித்து, ரூ.2.67 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்காக சிந்தாமணி காவலர் குடியிருப்பு வளாகத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் ஓரிரு வாரங்களில் தொடங்க உள்ளன.
முன்மாதிரி காவல் நிலையம்
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘திருச்சி மாநகரின் முன்மாதிரி காவல்நிலையமாக இந்த கட்டிடத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. லிப்ட் வசதியுடன், 5 தளங்களைக் கொண்டதாக அமையும் இக்கட்டிடத்தின் தரைத்தளத்தில் வரவேற்பு மற்றும் காத்திருப்போர் அறை, முதல் தளத்தில் சட்டம் ஒழுங்கு காவல் நிலையம், 2-வது தளத்தில் குற்றப்பிரிவு காவல் நிலையம், 3-வது தளத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம், 4-வது தளத்தில் போக்குவரத்து காவல் நிலையம் மற்றும் ஓய்வு அறை ஆகியவை அமைக்கப்பட உள்ளன. தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் மூலம் இதற்கான கட்டுமான பணிகள் விரைவில் தொடங் கப்பட உள்ளன’’ என்றனர்.
நீதிமன்ற காவல் நிலையம்
இதுதவிர செஷன்ஸ் நீதிமன்ற காவல் நிலையம், கன்டோன்மென்ட் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் நிலையம் ஆகியவற்றுக்கு பீமநகர் காவலர் குடியிருப்பு வளாகத்தில் ரூ.2 கோடி செலவில் புதிய கட்டிடங்களை கட்டவும் தமிழக அரசு ஒப்புதல் அளித்து, நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
கோட்டை காவல் நிலைய பணிகளுடன் சேர்த்து, இப்பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.