Published : 20 Jul 2021 03:15 AM
Last Updated : 20 Jul 2021 03:15 AM

அங்கீகாரமற்ற மனைகளை பதிவு செய்தால் நடவடிக்கை: அலுவலர்களுக்கு அமைச்சர் பி.மூர்த்தி எச்சரிக்கை

அங்கீகாரமற்ற மனைகளைப் பதிவு செய்யும் பதிவுத் துறை அலுவலர்கள் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.

மாநில வணிக வரி மற்றும் பதிவுத் துறை சார்பில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்த வணிகர் சங்கப் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் பதிவுத் துறையின் திருச்சி மற்றும் தஞ்சாவூர் பதிவு மண்டல சீராய்வுக் கூட்டம் ஆகியன திருச்சி தேசியக் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாநில வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு வரவேற்றார். பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், இளைஞர் நலன்- விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன் மற்றும் அரசு செயலர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தின்போது, சரக்குகளுக்கான புதுப்பிக்கப்பட்ட வரி விவர புத்தகத்தை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு வெளியிட, சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து, கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசியது: வருவாய்த் துறை, வணிக வரித் துறை, பத்திரப் பதிவுத் துறை, வட்டாரப் போக்குவரத்துத் துறை ஆகிய துறைகள்தான் அரசுக்கு அதிக வரி வசூல் செய்து அளிக்கின்றன. இங்குள்ள அரசு அலுவலர்கள் சிறப்பாகச் செயல்பட்டு அரசுக்கு மிகுந்த வருவாயை உண்டாக்கித் தர வேண்டும். நீங்கள் வரி வசூல் செய்து தந்தால்தான் நாங்கள் சாலை அமைக்க முடியும் என்றார்.

கூட்டத்துக்குப் பின், அமைச்சர் பி.மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியது:

நேர்மையாக தொழில் செய்யும் வணிகர்களுக்கு இந்த அரசு உற்ற நண்பனாக இருக்கும். அதேசமயம், போலியாக ஜிஎஸ்டி வாங்கிக் கொண்டு வணிகர்களுக்கு தவறான பாதையைக் காட்டும் அலுவலர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

பத்திரப்பதிவுத் துறையில் அங்கீகாரமற்ற மனைகளைப் பதிவு செய்யக் கூடாது என்றும், இடைத்தரகர்கள் இன்றி குறிப்பிட்ட நேரத்தில் உரியவர்களை அலுவலகத்துக்கு வரவழைத்து பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கீகாரமற்ற மனைகளைப் பதிவு செய்யும் அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். போலியாக பத்திரங்கள் பதிவு செய்வதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

அப்போது, வணிக வரி மற்றும் பதிவுத் துறை அரசு செயலர் பா.ஜோதி நிர்மலாசாமி, முதன்மைச் செயலரும் வணிக வரித் துறை ஆணையருமான எம்.ஏ.சித்திக், பதிவுத் துறை தலைவர் ம.ப.சிவனருள் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x