

பள்ளிகொண்டாவில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந் துள்ள தச்சு கருமார உற்பத்திக் கூடத்தின் சார்பில் பொது மக்களை கவரும் வகையில் புதிய ஷோரூம் தொடங்க வேண்டும் என அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டா சுங்கச்சாவடி அருகே தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் கட்டுப்பாட்டில் தச்சு கருமார அலகு செயல்படுகிறது. இதனை, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் பேசும்போது, ‘‘கடந்த 1993-ம் ஆண்டு முதல் செயல்படும் இந்த தச்சு கருமார அலகு 1996-97-ம் ஆண்டு முதல் லாபத்தில் இயங்கி வருகிறது.
இங்கு அரசு துறைகள், பள்ளி கள், கல்லூரிகள், நூலகங்கள், அஞ்சலகங்கள், நீதிமன்றங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு மரத் தள வாடங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.2 முதல் ரூ.3 கோடி மதிப்பிலான தளவாடங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.
கடந்த நிதியாண்டில் ரூ.3 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ரூ.3.72 கோடிக்கு தளவாடங்கள் உற்பத்தி செய்யப்பட்டது. நடப்பாண்டிலும் ரூ.3 கோடி இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில் தற்போது வரை ரூ.71.94 லட்சம் மதிப்பிலான தளவாடங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்களை கவரும் வகையில் புதுப்புது வடிவங்களை கண்டறிந்து மரம் மற்றும் இரும்பு தளவாடங்களை உற்பத்தி செய்ய வேண்டும். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ள இந்த அலகின் சார்பில் பொதுமக்களை கவரும் வகையில் ஷோரூம் தொடங்க வேண்டும். இங்கு, 50 கிராமப்புற தொழிலாளர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு அதிகளவில் வேலைவழங்க வேண்டும்’’ என்றார்.
கைத்தறி நெசவு பயிற்சி
குடியாத்தம் நகரில் அன்னை அஞ்சுகம் தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் ‘சமர்த்’ திட்டத்தின் கீழ் 20 பேருக்கு கைத்தறி நெசவு பயிற்சி வழங்கும் திட்டத்தை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று தொடங்கி வைத்தார். பின்னர், கணபதி தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்திலும் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ஆர்.காந்தி, நெசவாளர்களுக்கான நலத்திட்ட உதவிகளையும் வழங் கினார்.
இந்த ஆய்வின்போது, கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் முதன்மை செயலாளர் பீலா ராஜேஷ், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் தலைமை செயல் அலுவலர் சங்கர், வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார் (அணைக்கட்டு), அமலு விஜயன் (குடியாத்தம்), இணை இயக்குநர் (கைத்தறி) கிரிதரன், இணை இயக்குநர் (துணிநூல்) சாரதி சுப்புராஜ், வேலூர் சரக உதவி இயக்குநர் முத்துபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.