

காமராஜர், ஜெயலலிதா போன்ற பெரிய தலைவர்களே தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர். இதில், நான் தோல்வியடைந்தது பெரிய விஷயமே இல்லை. வெற்றியும், தோல்வியும் வீரனுக்கு அழகுதானே தவிர, அது அவமானம் இல்லை என முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட அதிமுக செயல் வீரர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. வாணியம்பாடி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமார் வரவேற்றார். ஜோலார்பேட்டை ஒன்றியச் செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார்.
முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான கே.சி.வீரமணி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசியதாவது:
‘‘நடந்து முடிந்த தேர்தலில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நான் பொறுப்பாளராகப் பணியாற்றினேன். அதிமுக வேட்பாளர்களை ஆதரித்துப் பல தொகுதிகளில் நான் பிரச்சாரம் செய்தேன். என் தொகுதியில் கட்சி நிர்வாகிகள் எனக்காகப் பிரச்சாரம் செய்தனர். அவர்கள் முழுமையாகப் பணியாற்றாததால் நான் சொற்ப வாக்குகளில் என் வெற்றியை இழந்தேன்.
தேர்தலில் வெற்றியும், தோல்வியும் சகஜம்தான். காமராஜர், ஜெயலலிதா போன்ற பெரிய தலைவர்களே தேர்தலில் தோல்வியைச் சந்தித்துள்ளனர். இதில், நான் தோல்வியடைந்தது பெரிய விஷயமே இல்லை. வெற்றியும், தோல்வியும் வீரனுக்கு அழகே தவிர அது அவமானம் இல்லை. வெற்றியை எப்படி ஏற்றுக்கொள்கிறோமோ அதைப் போலவே தோல்வியையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தோல்வியடைந்து விட்டோமே என வருந்தக் கூடாது. அடுத்து வெற்றிக்கு என்ன வழி என்பதை மட்டுமே நாம் ஆராய வேண்டும். எனவே, சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தோல்வியைத் தழுவினாலும் அடுத்து வரவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் நாம் அனைத்து இடங்களையும் கைப்பற்ற வேண்டும். அதையே குறிக்கோளாக எண்ணிப் பணியாற்ற வேண்டும்.
கட்சி நிர்வாகிகள் மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிய வேண்டும். அதிமுக ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட சாதனைகளைப் பட்டியலிட்டுக் காட்ட வேண்டும். நமக்கு வாக்களிக்காவிட்டாலும் பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளைக் கட்சி நிர்வாகிகள் செய்ய வேண்டும். கரோனா பொது முடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்த ஏழை, எளிய மக்களுக்குத் தேவையான உதவிகளை அதிமுக நிர்வாகிகள் செய்து கொடுக்க முன்வர வேண்டும்.
வெற்றி ஒன்றே நமது இலக்கு என்ற நிலைப்பாடு அதிமுக தொண்டனுக்கு ஏற்பட வேண்டும். ஒற்றுமையுடன் பாடுபட்டால் உள்ளாட்சித் தேர்தலில் நமது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது’’.
இவ்வாறு கே.சி.வீரமணி பேசினார்.
இந்நிகழ்ச்சியில், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் கோ.வி.சம்பத்குமார், பாசறை மாவட்டத் துணைத் தலைவர் ரவீந்திரகுமார், ஜோலார்பேட்டை தகவல் தொழில்நுட்ப அமைப்பாளர் மணிகண்டன் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.