Last Updated : 19 Jul, 2021 04:21 PM

 

Published : 19 Jul 2021 04:21 PM
Last Updated : 19 Jul 2021 04:21 PM

என்னை அக்கா என்று அழைக்கலாம்: புதுச்சேரி ஆளுநர் தமிழிசை

காவிரி ஆற்று நீரின் பங்கும் அந்தந்த மாநிலங்களுக்குக் கிடைக்க வேண்டிய அளவு அந்தந்த மாநிலங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதும் முக்கியம் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.

நான் அனைவருக்கும் சகோதரிதான். அக்கா என்றும் என்னை அழைக்கலாம் என்று தமிழிசை குறிப்பிட்டார்.

புதுச்சேரியில் நீரும் ஊரும் திட்டத்தின் கீழ் தூர்ந்துபோன குளங்களைக் கண்டறிந்து தூர்வாரப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட புதுகுப்பம் பகுதியில் 200-வது குளம் தூர்வாரும் பணி இன்று தொடங்கியது. துணைநிலை ஆளுநர் தமிழிசை தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பேரவைத் தலைவர் ஏம்பலம் செல்வம், கவிஞர் சினேகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக குளம் தூர்வாரும் பணிக்கான பூஜை நடைபெற்றது.

துணைநிலை ஆளுநர் தமிழிசை பேசுகையில், "உணவிற்கும். எல்லாவற்றுக்கும் நீர் தேவை. ஆனால், நாம் நீரைப் பழித்திருக்கிறோம். அதனால் தண்ணீரை விலைகொடுத்து வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.

அன்று ஓடம் வைத்துக் கடந்த காவிரி ஆற்றில் இன்று நீர் குறைந்து இருக்கிறது. ஆனால், அந்தக் காவிரி ஆற்று நீரின் பங்கும் அந்தந்த மாநிலங்களுக்குக் கிடைக்க வேண்டிய அளவு அந்தந்த மாநிலங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதும் முக்கியம்.

75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறோம். அதனை ஒட்டி 75 ஆயிரம் மரக்கன்றுகளைப் புதுச்சேரி முழுவதும் நடுவதற்கான திட்டம் இருக்கிறது. இது சம்பந்தமாக முதல்வரிடமும் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறேன். நீரும் ஊரும் திட்டத்தின் கீழ் குளங்கள் தூர்வாரப்பட்டதால் நிலத்தடி நீர் அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் உள்ள அனைத்துக் குளங்களும் தூர்வாரப்படும்'' என்று குறிப்பிட்டார்.

என்னை அக்காவென்று கூப்பிடலாம்

முன்னதாக, கவிஞர் சினேகன் பேசும்போது ஆளுநர் தமிழிசையை அக்கா என்று அழைத்துப் பேசினார். அதையடுத்து ஆளுநர் பேசுகையில், "நான் அனைவருக்கும் சகோதரிதான். அக்கா என்றும் கூப்பிடலாம்" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x