கல்வியை சீரமைக்க வேண்டும்: எஸ்ஆர்எம் துணைவேந்தர் யோசனை

கல்வியை சீரமைக்க வேண்டும்: எஸ்ஆர்எம் துணைவேந்தர் யோசனை
Updated on
1 min read

இந்தியா பொருளாதார வல்லரசாக மாற வேண்டுமானால் தற்போதைய கல்விமுறை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று எஸ்ஆர்எம் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பிரபிர் பக்சி கூறினார்.

கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், கல்வியாளர்கள் தங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் வெளிப்படுத்தும் வகையிலும் ‘தி இந்து இன் ஸ்கூல்’ சார்பில் ஆண்டுதோறும் பள்ளி முதல்வர்கள் மற்றும் கல்வியாளர்களின் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், ‘தி இந்து இன் ஸ்கூல்’, எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சென்னையில் நேற்று பள்ளி முதல்வர்களின் மாநாட்டை நடத்தியது. இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பள்ளிகளின் முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள், தாளாளர்கள், கல்வியாளர்கள் கலந்துகொண்டனர். ‘புது யுகத்தில் கல்வி’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் பிரபிர் கே.பக்சி தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

நம் நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களும், ஆயிரக்கணக்கான கல்லூரிகளும் உள்ளன. ஆனால், உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இந்திய பல்கலைக்கழகங்கள் இடம்பெற முடியவில்லை. உலக மக்கள் அனைவராலும் விரும்பி வாங்கக்கூடிய ஏதேனும் ஒரு பொருளையாவது நாம் உருவாக்கியிருக்கிறோமா?

கல்லூரிகளில் படித்துவிட்டு வெளியே வரும் பட்டதாரிகள் வேலைக்கு உகந்தவர்களாக இல்லை என்று தொழில் நிறுவனங்கள் குற்றம்சாட்டுகின்றன. நமது கல்விமுறையானது மனப்பாடம் சார்ந்து இயங்குகிறதே ஒழிய மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்கும் வகையில் இல்லை. படைப்பாற்றலை வளர்க்கும் கல்வி, ஆராய்ச்சிக்கு வழிவகுக்கும். எனவே, படைப்பாற்றல் கல்வி ஊக்குவிக்கப்பட வேண்டும். அதற்கான அஸ்திவாரம், பள்ளி கல்வியிலேயே போடப்பட வேண்டும். பள்ளிக்கல்வி சரியாகிவிட்டால் உயர்கல்வி சீராகிவிடும். நம் நாடு பொருளாதார வல்லரசாக மாற வேண்டுமானால் கல்விமுறையை மறுசீரமைக்க வேண்டும். தற்போதைய கல்விமுறையை மாற்றினால், புதிய இந்தியாவை உருவாக்க முடியும். இவ்வாறு துணைவேந்தர் பக்சி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in