

சட்டப்பேரவை நூற்றாண்டு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள விடுக்கப்பட்ட அழைப்பை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
டெல்லியில் குடியரசுத் தலைவரைச் சந்தித்தபின் முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் அளித்த பேட்டி:
“தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றபின் முதன்முறையாகக் குடியரசுத் தலைவரைச் சந்தித்தேன். முதல்வராகப் பொறுப்பேற்றதற்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து சொன்னார். அவருக்கு நான் நன்றி தெரிவித்தேன்.
அதேபோன்று சென்னை மாகாணத்தின் மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் தனித்தன்மையோடு செயல்பட்ட சட்டப்பேரவை 12.01.1921 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. அதை நினைவுபடுத்தும் வகையில் சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவைக் கொண்டாட அரசு முடிவெடுத்துள்ளது. அந்த விழாவிற்குத் தலைமை தாங்கி நடத்திக்கொடுக்க குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை வைத்தேன். அதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
அந்த விழாவில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப் படம் சட்டப்பேரவை வளாகத்திற்குள் திறந்து வைக்கப்படும் என்கிற தகவலையும் தெரிவித்தேன். அதேபோல் மதுரையில் கருணாநிதி பெயரால் அமையவிருக்கும் நூல் நிலையம், சென்னை கிண்டியில் அமையவுள்ள அரசு மருத்துவமனையின் அடிக்கல் நாட்டு விழாவையும், அதேபோல் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் சென்னை கடற்கரைச் சாலையில் அமைய உள்ள நினைவுத் தூணையும் திறந்து வைக்குமாறு கோரிக்கை வைத்தோம். அதற்கு வருவதாகக் குடியரசுத் தலைவர் இசைவு தெரிவித்தார். தேதி குறித்து ஓரிரு நாளில் தெரிவித்தாகக் கூறினார்”.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.