

முதல்வராகப் பொறுப்பேற்றபின் முதன் முறையாகக் குடியரசுத் தலைவரைச் சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின். இந்தச் சந்திப்பின்போது மேகதாது அணை பிரச்சினை, நீட் தேர்வு ரத்து, எழுவர் விடுதலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கோரிக்கை வைத்துள்ளதாகத் தெரிகிறது.
தமிழக முதல்வராக மே 7 அன்று ஸ்டாலின் பொறுப்பேற்றார். முதல்வராகப் பொறுப்பேற்பவர்கள் குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோரை மரியாதை நிமித்தமாகச் சென்று சந்திப்பது மரபு.
அதன் அடிப்படையில் பிரதமர், குடியரசு துணைத் தலைவரை முதல்வர் ஸ்டாலின் சந்தித்துவிட்டார். ஆனால், குடியரசுத் தலைவரைச் சந்திக்கவில்லை. இதனால் குடியரசுத் தலைவரைச் சந்திக்க முதல்வர் நேரம் கேட்டிருந்த நிலையில், இன்று நண்பகல் 12 மணிக்குச் சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்திக்க முதல்வர் ஸ்டாலின் நேற்று மாலை புறப்பட்டு டெல்லி சென்றார். இரவு தமிழ்நாடு இல்லத்தில் தங்கிய அவர், இன்று காலை குடியரசுத் தலைவரைச் சந்தித்துப் பேச ராஷ்டிரபதி பவனுக்குப் புறப்பட்டுச் சென்றார். அவருடன் மக்களவை திமுக தலைவர் டி.ஆர்.பாலுவும் உடன் சென்றார்.
குடியரசுத் தலைவருடனான மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றாலும் சந்திப்பின்போது தமிழகத்தின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்ததாகத் தெரிகிறது.
கடந்த வாரம் பிரதமருடனான முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசினார். அப்போது, ''கரோனா 3 அலை பரவும் சூழலில், பள்ளி - கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தற்போதைய சூழலில், நீட் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை நடத்துவது தொற்றுப் பரவலுக்கு வழிவகுக்கும். பிரதமர் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.
டெல்லியில் குடியரசுத் தலைவருடனான சந்திப்பில், நீட் தேர்வு ரத்து, மேகதாது அணை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது, தமிழக மக்கள்தொகைக்கு ஏற்ப அதிக அளவில் கரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும், எழுவர் விடுதலை போன்ற கோரிக்கைகளை ஸ்டாலின் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.
குடியரசுத் தலைவரைச் சந்தித்தபின் நேராக விமான நிலையம் வரும் முதல்வர் ஸ்டாலின், செய்தியாளர்களைச் சந்தித்தபின் சென்னை திரும்புகிறார்.