Published : 19 Jul 2021 03:12 AM
Last Updated : 19 Jul 2021 03:12 AM

கர்நாடகா அணைகளில் உபரிநீர் திறப்பால் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 18,000 கனஅடியாக அதிகரிப்பு: அருவிகளில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்

கர்நாடக மாநில அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் ஐந்தருவியில் (ஐவர் பாணி) ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்.

தருமபுரி

கர்நாடக மாநில அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து விநாடிக்கு 18,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் கடந்த 16-ம் தேதி நீர்வரத்து விநாடிக்கு 3,000 கனஅடியாக இருந்தது. இதனிடையே, கேரளா மற்றும் கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.

இதையடுத்து, இரு அணைகளில் இருந்தும் உபரிநீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர் மற்றும் ஒகேனக்கல் சுற்று வட்டாரப் பகுதிகளில் அவ்வப்போது பெய்யும் மழை நீரும் சேர்ந்து ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்று முன்தினம் விநாடிக்கு 5,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 8,000 கனஅடியாகவும், காலை 11 மணியளவில் 12,000 கனஅடியாகவும், மாலை 3 மணி அளவில் 15,000 கனஅடியாகவும், மாலை 5 மணிக்கு 18,000 கனஅடியாகவும் தொடர்ந்து அதிகரித்தது.

இதையடுத்து, ஒகேனக்கல் பிரதான அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி(ஐவர் பாணி) உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. நீர்வரத்து அதிகரிப்பால் தருமபுரி மாவட்ட காவிரி கரையோரப் பகுதிகளில் வருவாய், வனத்துறை மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஏற்கெனவே கரோனா ஊரடங்கு காரணமாக அருவியில் பயணிகள்குளிக்கவும், பரிசலில் ஆற்றில் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேட்டூரிலும் அதிகரிப்பு

இதனிடையே மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 3,256 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 4,181 கனஅடியாக அதிகரித்தது. டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 71.97 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 71.87 அடியானது. நீர் இருப்பு 34.32 டிஎம்சி-யாக உள்ளது.

தற்போது கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறந்தவிடப்பட்டுள்ளது. முன்னதாக மேகேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எவ்வித அனுமதியையும் மத்திய அரசு தரக்கூடாது என வலியுறுத்தி அண்மையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி, தமிழகத்துக்கு தரவேண்டிய நீரை கர்நாடகம் வழங்காமல், உபரி நீரை திறந்துவிட்டு, கணக்கு காண்பிப்பதாக குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x