Published : 19 Jul 2021 03:12 AM
Last Updated : 19 Jul 2021 03:12 AM

2011-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசிகளை பெற வேண்டும்: முதல்வருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்த ஆண்டு இறுதிக்குள் சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் இருந்து 96 கோடி டோஸ் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து அனைத்து மாநிலங்களுக்கும் விநியோகிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. இதுதவிர ஹைதராபாத்தைச் சேர்ந்த பயோலாஜிக்கல்-இ நிறுவனம் கோர்பேவாக்ஸ் என்ற புதிய தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்த தடுப்பூசி கரோனாவுக்கு எதிரான போரில் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும், 90 சதவீத செயல்திறன் கொண்டுள்ளது என்றும், வரும் அக்டோபரில் இருந்து பயன்பாட்டுக்கு வரும் எனவும் தகவல் வந்துள்ளது.

இந்த நிறுவனத்திடம் இருந்து 30 கோடி கோர்பேவாக்ஸ் தடுப்பூசிகளை கொள்முதல் செய்யவும் மத்திய அரசு ஒப்பந்தம் ஏற்படுத்தி, முன்பணத்தையும் செலுத்தியுள்ளதாக செய்தி வந்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைகள் கரோனா நோய்த் தொற்றின் 3-வது அலையை நிச்சயம் தடுத்து நிறுத்தும்.

2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழக மக்கள்தொகை 7.21 கோடி. இது இந்திய மக்கள்தொகையில் 6.061 சதவீதம். இந்தசதவீதம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 4.787 சதவீதம்தான் செலுத்தப்பட்டுள்ளன. மக்கள்தொகை அடிப்படையில் 51 லட்சத்து 58 ஆயிரத்து 335 தடுப்பூசிகள் குறைவாக செலுத்தப்பட்டுள்ளன.

மத்திய அரசால் கொள்முதல் செய்யப்படவுள்ள 96 கோடி தடுப்பூசிகளில், தமிழக மக்கள்தொகை அடிப்படையில் 6.061 சதவீத தடுப்பூசிகள், அதாவது 5 கோடியே 81 லட்சத்து 85 ஆயிரம் தடுப்பூசிகள் மற்றும் ஏற்கெனவே குறைவாக பெற்ற 51 லட்சத்து 58 ஆயிரத்து 335 தடுப்பூசிகள் என மொத்தம் 6 கோடியே 33 லட்சத்து 43 ஆயிரத்து 935 தடுப்பூசிகள் மத்திய அரசிடம் இருந்து பெற வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.

எனவே, இதில் முதல்வர் தனிக்கவனம் செலுத்தி, புள்ளி விவரங்களை பிரதமரிடம் நேரில் சென்றுஎடுத்துரைத்து, 2011-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தடுப்பூசிகளைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x