மகன் மத்திய அமைச்சராக இருந்தாலும் விவசாய வேலையே மகிழ்ச்சியளிக்கிறது: பாஜக முன்னாள் தலைவர் எல்.முருகனின் பெற்றோர் நெகிழ்ச்சி

நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே கோனூரில் வசிக்கும் மத்திய இணையமைச்சர் எல். முருகனின் பெற்றோர் எம்.லோகநாதன், எல்.வருதம்மாள்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே கோனூரில் வசிக்கும் மத்திய இணையமைச்சர் எல். முருகனின் பெற்றோர் எம்.லோகநாதன், எல்.வருதம்மாள்.
Updated on
1 min read

‘மகன் மத்திய அமைச்சரானது மகிழ்ச்சி தான். எனினும், நானும், எனது மனைவியும் விவசாய வேலை செய்து வாழ்வது தான் எங்களுக்கு பெருமை' என பாஜகவைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகனின் தந்தை எம்.லோகநாதன் தெரிவித்தார்.

தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் நாமக்கல் மாவட்டம் கோனூர் கிராமத்தைச் சேர்ந்தவர். சமீபத்தில் அவர் மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றார். இதற்கு முன்பு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் மற்றும் கட்சியில் எஸ்சி, எஸ்டி பிரிவு தேசிய தலைவர் போன்ற பல்வேறு பொறுப்புகளையும் வகித்துள்ளார்.

எனினும் இவரது தந்தை எம்.லோகநாதன், தாய் எல்.வருதம்மாள் ஆகியோர் இன்றளவும் விவசாயக் கூலி வேலை செய்தே பிழைப்பு நடத்தி வருகின்றனர். மகன் மத்திய இணை அமைச்சரானது சந்தோஷம் தான். ஆனாலும் எங்களது சொந்த உழைப்பில் வாழ்வது தான் எங்களுக்கு மகிழ்ச்சி என நெகிழ்ச்சி பொங்க கூறுகிறார் எம்.லோகநாதன்.

இதுகுறித்து அவர் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:

எங்களுக்கு 2 மகன்கள். மூத்தவர் முருகன், இளையவர் ராமசாமி. இளையவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். முருகன் சட்டக்கல்வி படித்து சென்னையிலேயே இருந்தார். அவருக்கு கலையரசி என்ற மனைவி, 2 மகன்கள் உள்ளனர். மருமகள் அரசு மருத்துவராக உள்ளார். மகன் பாஜக மாநிலத் தலைவராக இருந்தார். இப்போது மத்திய அமைச்சராகியுள்ளார். மகிழ்ச்சியளிக்கிறது.

சென்னையில் தன்னுடன் தங்கிவிடும்படி கூறுவார். எனினும், வீட்டுக்குள் அடைந்திருக்க இயலவில்லை. அதனால் அங்கு தங்குவதில்லை. அவ்வப்போது மகன், மருமகள், பேரன்களை பார்த்துவிட்டு வருவோம். நானும், எனது மனைவியும் விவசாயத் தோட்டங்களில் கூலி வேலை செய்து வருகிறோம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in