

டிஜிபி உள்பட போலீஸாருக்கு சவால் விட்டு தலைமறைவாக இருந்த பிரபல நெல்லை ரவுடி சென்னையில் பதுங்கி இருந்தபோது போலீஸாரால் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி அருகே பங்களா சுரண்டை, வேதக்கோயில் தெருவை சேர்ந்தவர் பிரபல ரவுடி கோழி அருள்ராஜ் (47). இவர் மீது பாவூர்சத்திரம், பாளையங்கோட்டை, பெருமாள்புரம், சுரண்டை, குரும்பூர், வடக்கு தூத்துக்குடி, எப்போதும் வென்றான், தாடிகொம்பு, கரூர், எழும்பூர், விருகம்பாக்கம் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட 21 வழக்குகள் உள்ளன.
இதற்கிடையில் கடந்த 12ம் தேதி தாழையூத்து பகுதியை சேர்ந்த ஒப்பந்ததாரர் கண்ணன் (35) என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் போலியான குற்றவாளிகள் நீதிமன்றத்தில் சரணடைந்ததாகவும், உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கூறி ரவுடி அருள்ராஜ் வாட்ஸ் அப்பில் ஆடியோ வெளியிட்டு இருந்தார். அதில், இரு சமூகத்தினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
மேலும், அவர் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்படும் வகையிலும் போலீஸாருக்கு சவால் விடுத்திருந்தார். குறிப்பாக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபுவுக்கும் தன்னை பிடிக்க முடியாது என்று சவால் விட்டிருந்தார்.
இதனையடுத்து, திருநெல்வேலி காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு ரவுடி அருள்ராஜை போலீஸார் தீவிரமாக தேடிவந்தனர். இதற்கிடையில், சென்னை அருகே அம்பத்தூர், அத்திபட்டு, ரெட்டி தெருவில் உள்ள உறவினர் வீட்டில் அருள்ராஜ் பதுங்கி இருப்பது குறித்து தனிப்படை போலீஸார் ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து உதவி ஆய்வாளர் காதர் தலைமையில் தனிப்படை போலீஸார் சென்னைக்கு நேற்று முன்தினம் இரவு விரைந்து வந்தனர். பின்னர், அவர்கள் அம்பத்தூர் காவல் உதவி ஆணையர் கனகராஜ் உதவியுடன், உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த ரவுடி அருள்ராஜை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். பின்னர், அவரை நேற்று அம்பத்தூர் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்.
‘டேங்கர் லாரியோடு 500 பேரை கொன்று விட்டுதான் சாவேன்'
ரவுடி கோழி அருள்ராஜ் போலீஸாருக்கு விட்ட மிரட்டல் ஆடியோ: காவல்துறை எனது நண்பராக இருந்தனர். இப்போது எனக்கே துரோகம் செய்கின்றனர். தற்போது காவல் துறையில் ஜாதி வெறி உள்ளது. அதை மாற்றிக் கொள்ளுங்கள். அண்மையில் நடைபெற்ற கொலை தொடர்பாக செங்கோட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தவர்கள் போலி குற்றவாளிகள். 1996ல் ஜாங்கிட் எஸ்பியாக இருந்தபோதே பிரபல சமூகத்தலைவர் ஒருவரின் வழக்கறிஞரையே கொலை செய்தோம். போலீஸார் ஒரு சமூகம் சார்ந்து தவறான முடிவு எடுத்தால் அப்போது, வீரப்பனை விட மோசமாக எங்களை தேட வேண்டியது வரும். நான் செத்தாலும் கவலை பட மாட்டேன். கியாஸ் நிரப்பப்பட்ட டேங்கர் லாரியை மோத விட்டு 500 பேரை கொன்றுவிட்டுத்தான் சாவேன். டிஜிபி நினைத்தால் கூட என்னை பிடிக்க முடியாது என போலீஸாருக்கு ரவுடி கோழி அருள்ராஜ் சவால் விட்ட ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.