

கோவையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப் பணிகளால் 7 குளங்களில் சுமார் 20 ஏக்கர் அளவுக்கு நீர் தேங்கும் பரப்பளவு குறைந்துள்ளதாக தன்னார்வ அமைப்பினர் இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, சிறுதுளி, ஓசை, கௌசிகா நீர் கரங்கள், கியூப், ராக், அருளகம், ஆச்சான்குளம் பாதுகாப்பு இயக்கம், சி4டிஎன், சூலூர் நீர்நிலைகள் பாதுகாப்பு அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கோவை மாநகராட்சி வசம் உள்ள 9 குளங்களில் 7 குளங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. குளக் கரைகளில் அழகுபடுத்துதல் மற்றும் பொழுதுபோக்கு அம்சத்துக்காக நீர்தேங்கும் பரப்பளவை சுமார் 20 ஏக்கர் அளவுக்கு குறைத்து பணிகள் நடைபெறுகின்றன. வாலாங்குளம், முத்தண்ணன் குளம், செல்வாம்பதி குளம் ஆகியவற்றின் கரைகளில் பல ஆண்டுகளாக குடியிருந்த குடிசைவாசிகள் அப்புறப்படுத்தப்பட்டு 39.14 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. குளங்களின் நீர்தேக்க பரப்பளவை அதிகரிக்கவே அந்த இடங்கள் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஆகியவற்றின் தீர்ப்புகளுக்கு எதிராகவும், இயற்கைக்கு முரணாகவும் அந்த இடங்களை பொழுதுபோக்கு மையங்களாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.
32 கோடி லிட்டர் நீர் சேமிக்கலாம்
கையகப்படுத்தப்பட்ட பகுதிகளில் 2 மீட்டர் உயரத்துக்கு நீர் தேக்கினால், 32 கோடி லிட்டர் நீரை சேமிக்க முடியும். இதன்மூலம், கோவையில் உள்ள பகுதிகளில் நீர்மட்டம் கணிசமாக உயரும். குளங்களை தூர்வாரி நீர்தேங்கும் அளவை அதிகரிப்பதற்கான தேவை உள்ள நிலையில், அதுதொடர்பாக எந்தப் பணியும் மேற்கொள்ளப்படவில்லை. குளக்கரையை அகலப்படுத்தி, சாலை அமைத்து பரப்பளவு குறைக்கப்பட்டுள்ளது. மாசுபட்ட நீரால் சூழல் சீர்கெட்டுள்ள குளக் கரைகளில், நடைபாதை, குடில்கள், உணவகம் போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. அழகுபடுத்தும் பணிக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள இதுபோன்ற கட்டுமானங்களை பராமரிக்க எதிர்காலத்தில் கூடுதல் செலவு ஏற்படும்.
கழிவுநீர் தடுக்கப்படவில்லை
கோவை மாநகர பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை நேரடியாக குளங்கள், நொய்யல் ஆற்றில் கலந்து சுற்றுச்சூழல் மாசுபடுத்தப்பட்டு வருகிறது. குளங்களில் கழிவுநீர் கலப்பை தவிர்க்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. நீர்வழிப்பாதைகள், நீர் வெளியேறும் பகுதிகளை சீரமைக்க முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. நொய்யல் புனரமைப்பு திட்டத்தின்கீழ் குளக் கரைகளில் பதிக்கப்படும் கான்கிரீட் பிளாக்குகளின் தரம் மிகவும் குறைவாக உள்ளது. மேலும், குளங்களின் எல்லைகள், அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிய ‘சர்வே’ நடத்தப்படவில்லை.
எனவே, நொய்யல் ஆற்றை புதுப்பித்தல், புனரமைத்தல் திட்டத்தின்கீழ் நொய்யல் ஆறு, அதனை நம்பியுள்ள குளங்களில் நடைபெறும் பணிகள், ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தம், ஆட்சேபணைகள் குறித்து, ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் திருநாவுக்கரசு ஆய்வு மேற்கொண்டு அளித்துள்ள அறிக்கையை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.