

நொய்யலாற்றில் நேற்று நிறம் மாறி தண்ணீர் ஓடியது. சுத்திகரிப்பு செய்யாமல் சாயக் கழிவுநீரை திறந்துவிட்டதே இதற்கு காரணம் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
திருப்பூரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை உற்பத்திநிறுவனங்கள் செயல்படுகின்றன. அவற்றை சார்ந்து ஏராளமான ஜாப்ஒர்க் நிறுவனங்கள், துணிகளுக்கு சாயமேற்றிக் கொடுக்கும் சாய, சலவை ஆலைகளும் உள்ளன.இவற்றில் பல சாய, சலவை ஆலைகள் நொய்யல் மற்றும் நல்லாறு ஆகியவற்றின் கரைகளில் அமைந்துள்ளன. ஏற்கெனவே, திருப்பூரில் நொய்யலாற்றில் சுத்திகரிப்பு செய்யப்படாமல் சாயக் கழிவுநீர் திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நீதிமன்ற தீர்ப்புகளால் சாயக் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சாய, சலவை ஆலைகள் தங்களது சாயக் கழிவுநீரை சுத்திகரிப்பு நிலையங்கள் மூலமாகவோ அல்லது சொந்த சுத்திகரிப்பு கட்டமைப்பு மூலமாகவோ சுத்திகரிப்பு செய்த பிறகே வெளியேற்ற வேண்டும் என்ற வரைமுறை உள்ளது. இருப்பினும் திருப்பூரில் செயல் படும் சில சாய, சலவை ஆலைகள்,சாயக் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய ஏற்படும் செலவை குறைக்க, அவ்வப்போது நீர் நிலைகளில் கழிவுநீரை திறந்துவிடும் நிகழ்வும் தொடர்கிறது. குறிப்பாக, மழைக்காலங்களில் இது நடைபெறுகிறது.
இந்நிலையில், திருப்பூர் மற்றும்சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக மழை பெய்து வருகிறது. மேலும், கோவையிலும் மழை பெய்வதால் நொய்யலாற்றில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது. திருப்பூர் வளம் பாலம் அருகே நொய்யலாற்றில் தண்ணீர் நேற்று நிறம் மாறி ஓடியது. மழை பெய்வதை பயன்படுத்தி, சாயக் கழிவுநீரை திறந்து விட்டதே இதற்குகாரணம் என புகார் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து திருப்பூர் - பல்லடம் சாலையை சேர்ந்த சமூக ஆர்வலர் பாலசுப்ரமணியன் கூறும்போது, "நேற்று முன்தினம் இரவு திறந்துவிடப்பட்ட சாயக்கழிவுநீர்தான் இப்படி ஓடுகிறது. இதை, மழைக்காலங்களில் பலர் செய்து வருவது கவலையளிக்கிறது. மழைக்காலங்களில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டும்"என்றார்.