

நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழை, பலத்த காற்று காரணமாக பூண்டு பயிர் சாய்ந்துவிட்டதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தேயிலைக்கு அடுத்தபடியாக, நீலகிரி மாவட்டத்தில் மலைக் காய்கறி விவசாயம் முக்கிய வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. கேரட், பட்டாணி, பீட்ரூட், டர்னிஃப், உருளைக்கிழங்கு, பூண்டு ஆகிய பயிர்கள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன.
உதகை சுற்றுவட்டாரப் பகுதிகளான கல்லட்டி, கொல்லிமலை, எம்.பாலாடா, கேத்தி பாலாடா, தேனாடுகம்பை ஆகிய பகுதிகளில் அதிக அளவு பூண்டு பயிரிடப்படுகிறது. பல ஹெக்டேர் பரப்பளவிலான பூண்டு பயிர் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. ஆனால், மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக நிலவிய பலத்த சூறாவளிக் காற்று, மழையால் பூண்டு பயிர்கள் அனைத்தும் அடியோடு சாய்ந்துவிட்டன. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
பூண்டு பயிரிட்டிருந்த விவசாயிகள் கூறும்போது, "பூண்டு விவசாயத்தில் முதலீடு செலவு அதிகம்.காற்று, மழையால் பயிர்கள் சாய்ந்துவிட்டன. பாதிக்கு பாதிகூட கைக்கு கிடைக்காது. கடந்தாண்டு மழையால் பாதிக்கப்பட்டோம். இந்த ஆண்டும் இப்படி ஆகிவிட்டது. என்ன செய்வது என தெரியவில்லை" என்றனர்.
மழையுடன் காற்றும் வீசுவதால், பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து மின்கம்பிகள் மீது விழுகின்றன. இதனால், அடிக்கடி மின் விநியோகம் தடைபடுகிறது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணி நிலவரப்படிஉதகையில் 6.40 மி.மீ., கிளன்மார்கனில் 41, பந்தலூரில் 21,உலிக்கலில் 20, கோத்தகிரியில் 19, தேவாலாவில் 17, அவலாஞ்சியில்16, கோடநாட்டில் 15, சேரங்கோட்டில் 12, செருமுள்ளியில் 12, பாடந்துறையில் 11, நடுவட்டத்தில் 10, அப்பர் பவானியில் 5, குன்னூரில் 5.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
கோவை மாவட்டத்தில் சின்னகல்லாறு 70, சின்கோனா 49, சோலையாறு 21, வால்பாறை பிஏபி 19, வால்பாறை வட்டாட்சியர் அலுவலகம் 18, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் 9.50, சூலூர் 6, கோவை விமானநிலையம் 3.6, பொள்ளாச்சியில் 3 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.