Published : 19 Jul 2021 03:12 AM
Last Updated : 19 Jul 2021 03:12 AM

தென்னிந்தியாவில் சந்தைப்படுத்துதல் கட்டுப்பாட்டு விதிகளை மீறிய 24 தேயிலை கொள்முதல் நிறுவனங்களின் உரிமம் ரத்து

கோப்புப்படம்

குன்னூர்

சந்தைப்படுத்துதல் கட்டுப்பாட்டு விதிகளை மீறிய 24 தேயிலை கொள்முதல் நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, தேயிலை வாரிய செயல் இயக்குநர் எம்.பாலாஜி தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள இந்திய தேயிலை வாரிய மண்டல அலுவலகம் மூலமாக தேயிலை தொழிற்சாலைகள் மற்றும் தேயிலை தோட்டங்களில் தரமான தேயிலை உற்பத்தி செய்வதை உறுதி செய்யும் நோக்கில்,பல்வேறு ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதவிர, தேயிலை விற்பனை ஏல மையத்தில் தேயிலைதூள் மாதிரியை சேகரித்து ஆய்வகத்தில் தர பரிசோதனை மேற்கொள்ளுதல், விற்பனைக்கு வரும் தேயிலைத் தூளின் கொள்ளளவை கண்காணித்தல், சட்டரீதியாக படிவங்களை சமர்ப்பித்தல், தேயிலை கொள்முதல் செய்பவர்கள் உட்பட அனைத்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தென்னிந்தியாவில் தேயிலை (சந்தைப்படுத்துதல்) கட்டுப்பாட்டு விதிகளை மீறிய 24தேயிலை கொள்முதல் நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள் ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தேயிலை வாரிய செயல் இயக்குநர் எம்.பாலாஜிகூறும்போது, "தேயிலைத் தூளில்கலப்படம் செய்தல், தயாரிக்கப்பட்ட தேயிலை தொழிற்சாலை கழிவுகளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துதல் போன்றவைகளை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுகுறித்து 140-க்கும் மேற்பட்ட தேயிலை தொழிற்சாலைகள் மற்றும் 58 எஸ்டேட் தேயிலை தொழிற்சாலைகள், 14 தேயிலை இடைத்தரகர்கள், 30 தேயிலை கழிவு நிறுவனங்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இவற்றில் 44 உரிமங்களை தடை செய்து நிராகரிக்கப்பட்டுள்ளன. மேலும், உரிய ஆலோசனை கடிதங்களும் அனுப்பப்பட்டுள்ளன.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, தேயிலை (சந்தைப்படுத்துதல்) கட்டுப்பாட்டு விதிகளின் படி, தென்னிந்தியாவில் உள்ள 46 தேயிலை கொள்முதல் நிறுவனங்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இதில், காலாண்டில் சமர்ப்பிக்கப்படும் எஃப் படிவம் சமர்ப்பிக்காத தேயிலை கொள்முதல் செய்வோருக்கு, விதிமீறல் காரணத்தின் அடிப்படையில் விளக்கம் கோரப்பட்டுள்ளது. எந்தவிதமான பதிலையும் அளிக்காத 24 தேயிலை கொள்முதல் செய்யும் நிறுவனங்களுக்கு, இரண்டாவது முறையாக மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

தேயிலை கொள்முதல் செய்வோரின் காலாண்டு அறிக்கை சமர்ப்பித்தல் மிகவும் இன்றியமையாதது. இதன் மூலம் தேயிலை உற்பத்தி மற்றும் ஏலச் சந்தையில் விற்பனை ஒழுங்குபடுத்தப்படுகிறது. குறிப்பாக சிறு தேயிலை விவசாயிகளுக்கு மாதாந்திர பசுந்தேயிலை விலை நிர்ணயிக்க மிகவும் இன்றியமையாத தகவல் ஆகும். தேயிலை (சந்தைப்படுத்துதல்) கட்டுப்பாட்டு விதிகளின் படி, விரிவான விசாரணை மற்றும் தகவல் ஆய்வு செய்த பின்னர், தேயிலை கொள்முதல் செய்யும்24 நிறுவனங்களின் உரிமங்களைரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x