Published : 19 Jul 2021 03:13 AM
Last Updated : 19 Jul 2021 03:13 AM

நன்மங்கலம் காப்புக்காட்டுப் பகுதியில் அனுமதியின்றி பணிகளை தொடங்கக்கூடாது: மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை

நன்மங்கலம் காப்புக்காட்டுப் பகுதியில் உரிய அனுமதி இன்றி பணிகளை தொடங்கக் கூடாது என்று மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் 2-ம் கட்டமாக, மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை மெட்ரோ ரயில் வழித் தடத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த வழித்தடம் அமைய உள்ள பகுதி பல்வேறு தாவரங்கள் மற்றும் உயிரினங்களின் முக்கிய வாழ்விடமாக உள்ளது.

குறிப்பாக நன்மங்கலம் காப்புக்காட்டு பகுதியில் 120 வகையான பறவைகளும், 400 வகையான தாவரங்களும் உள்ளன. ‘இந்திய கழுகு ஆந்தை’ எனப்படும் அழிவின் விளம்பில் உள்ள பறவை இனம், சென்னை மாநகரில் இப்பகுதியில் மட்டுமே வாழ்கின்றன. இப்பகுதியில் உரிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்யாமல் திட்டத்தை செயல்படுத்தினால், இப்பகுதியில் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது.

இதன் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்திருந்தது. இந்த வழக்கு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது வனத்துறை தலைவர் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நன்மங்கலம் பகுதியில் உள்ள 676.45 ஏக்கர் பரப்புள்ள காட்டுப்பகுதி காப்புக்காடாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 40 ஏக்கர் தனியார் அறக்கட்டளை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டு இருந்தது. அதில் அந்த அறக்கட்டளை பயன்படுத்தாத 29.33 ஏக்கரை வனத்துறை பெற்றுக் கொண்டது. தற்போது தனியார் அறக்கட்டளை 10.67 ஏக்கர் காப்புக்காட்டு பரப்பை அனுபவித்து வருகிறது. நன்மங்கலம் காப்புக்காட்டு பகுதியில் மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்க, 3.87 ஏக்கர் பரப்பளவு பகுதியை, வனம் அல்லாத பணி மேற்கொள்ள வழங்குமாறு கோரி மெட்ரோ ரயில் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. சில விளக்கங்கள் கேட்டு விண்ணப்பம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. வனத்துறை குறிப்பிட்ட அம்சங்களுடன் மீண்டும் விண்ணப்பிக்க உள்ளது. இத்திட்டத்தால் இப்பகுதியில் உள்ள 112 மரங்கள் அகற்றப்பட உள்ளன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பின்னர் அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், "மெட்ரோ ரயில் நிறுவனம், உரிய அனுமதியைப் பெற்ற பின்னரே பணிகளைத் தொடங்க வேண்டும். அனுமதி அளிக்கும் நிறுவனம் விதிக்கும் நிபந்தனைகளை மெட்ரோ ரயில் நிறுவனம் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x