

காஞ்சிபுரம் நகரில் பிரசித்திப் பெற்ற ஏகாம்பர நாதர், வரதராஜ பெருமாள், காமாட்சியம்மன், சித்ரகுப்தன், கைலாசநாதர் கோயில் உள்ளிட்ட ஏராளமான கோயில்கள் அமைந்துள்ளதால், இத்தலம் கோயில் நகரமாக விளங்கி வருகிறது. இக்கோயில்களில் சுவாமி தரிசனம் செய்வதற்காக, வடமாநிலங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் ஆன்மிக சுற்றுலா வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், நகரில் பக்தர்கள் தங்குவதற்காக கோயில்நிர்வாகங்கள் சார்பில் விடுதிகள்,வாகன நிறுத்தம் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படாமல் இருந்ததால், ஆன்மிக சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை ஓரிடத்தில் ஏற்படுத்த வேண்டும் என்று உள்ளூர் மக்கள் மற்றும் வெளியூர் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதன்பேரில், ஆசிய வளர்ச்சிவங்கியின் நிதி உதவியின் மூலம்ஒலிமுகம்மது பேட்டை அருகேஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் ரூ.24 கோடி மதிப்பில் 5 தளங்களுடன் கூடிய பக்தர்கள் தங்கும் விடுதி அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. இதில், குளிர்சாதன வசதியுடன் கூடிய 34 அறைகள், உணவகம், நவீன வசதியுடன் கூடிய கூட்டரங்கம் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், வெளிமாநிலங்களில் இருந்து ஆன்மிக சுற்றுலாவாக பேருந்துகளில் வரும் பக்தர்கள் ஒரே இடத்தில் தங்குவதற்காக, சுமார் 300 நபர்கள் தங்கும் வகையில் விடுதி வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது, விடுதியின் கட்டுமானப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து திறப்புவிழாவுக்காக தயார் நிலையில் உள்ளதால், உள்ளூர் மக்கள் மற்றும் பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, சுற்றுலா மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள் கூறியதாவது: பக்தர்கள் தங்கும்விடுதியின் கட்டுமானப் பணிகள்நிறைவுபெற்றுள்ளன. இதில், மின்தூக்கி மற்றும் நவீன வசதிகளுடன்பல்வேறு விதமான அறைகள்,கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
விடுதியின் அருகே சுமார் 150 பேருந்துகளை நிறுத்தும் வகையில் பிரசாத் திட்டத்தில் ரூ.5.41 கோடி மதிப்பில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில், வைஃபை, சோலார் மின்விளக்குகள், கழிப்பறைகள், ஓட்டுநர்கள் தங்குமிடம் மற்றும்புராதன தகவல்களை வெளிப்படுத்தும் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளன. ஆன்மிக சுற்றுலா வாகனங்கள் அனைத்தையும் இங்கு நிறுத்துவதன் மூலம் நகரில் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் குறையும். நிர்வாகரீதியான பணிகள் நிறைவடைந்ததும் விடுதி திறக்கப்படும் என்றனர்.