Published : 19 Jul 2021 03:13 AM
Last Updated : 19 Jul 2021 03:13 AM

தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஆய்வு

தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.

தாம்பரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஜிஎஸ்டி சாலையில், கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளை இணைக்கும் வகையில், எஸ்கலேட்டர் வசதியுடன் கட்டப்பட்டுள்ள நடை மேம்பாலத்தை அமைச்சர் எ.வ.வேலு, தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜாவுடன் ஆய்வு செய்தார்.

அப்போது, தாம்பரம் ரயில் நிலைய 1-வது நடைமேடை இணைக்கும் பணிகள் கிடப்பில் உள்ளதைப் பார்வையிட்ட அமைச்சர், பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது, தாம்பரம் ஜிஎஸ்டிசாலையுடன், சண்முகம் சாலையை இணைக்கவேண்டுமென்று வியாபாரிகள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருவதாக, எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா அமைச்சரிடம் தெரிவித்தார்.

அதேபோல, தாம்பரம் நீதிமன்றம் அருகே, பொதுமக்களின் வசதிக்காக சர்வீஸ்சாலையை அகலப்படுத்தித் தர வேண்டுமென்றும் எம்எல்ஏ அமைச்சரிடம் வலியுறுத்தினார்.

பின்னர், குரோம்பேட்டை பகுதியில் பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதியுடன் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், அங்கு ரயில்வே தண்டவாளத்தைக் கடந்து செல்லும் வகையில் அமைக்க இருக்கும் சுரங்கப் பாதையை, பொதுமக்களின் கோரிக்கைப்படி வாகனங்கள் செல்லும் சுரங்கப் பாதையாக அமைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், ஏற்கெனவே நடைபெற்று வரும் ராதா நகர் சுரங்கப் பாதை பணிகளை விரைவில் முடிக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

ஒருவழிப் பாதையாக உள்ள பல்லாவரம் மேம்பாலத்தை இருவழிப் பாதையாக மாற்ற வேண்டும். குரோம்பேட்டை-ஜிஎஸ்டி சாலையில் தனியார் கல்லூரிக்குச் செல்லும் வழியருகே, எஸ்கலேட்டர் வசதியுடன் கூடிய நடைமேம்பாலம் அமைக்க வேண்டும், பல்லாவரம் மேம்பாலத்தின் கீழ் சிக்னல் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை, பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி அமைச்சரிடம் தெரிவித்தார்.

மேலும், அமைச்சர் எ.வ.வேலு , ரூ.108 கோடியில் நடைபெற்று வரும் வேளச்சேரி மேம்பாலம், ரூ.146.41 கோடியில் நடைபெற்று வரும் மேடவாக்கம் மேம்பாலம் மற்றும் கோயம்பேட்டில் ரூ.93.50 கோடியில் அமைக்கப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பணிகளை விரைந்து முடித்து அவற்றை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் அறிவுறுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x