

நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி பலப்படுத்தப்பட்டு மீண்டும் பலமான இயக்கமாக மாறும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
மதுரை காங்கிரஸ் பிரமுகர் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் உள்ளிட்டோர் ஞாயிற்றுக்கிழமை மதுரை வந்தனர்.
பின்னர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் பேசியது:
மத்தியில் மாற்று அரசு அமைய வேண்டும் என்று மக்களிடம் இருந்த தாக்கமே மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குக் காரணம்.
எனவே அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு சரிவு ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட பல திட்டங் களின் மூலம் மக்களுக்கு ஏராள மான பலன்கள் கிடைத்துள்ளன. மக்கள் வேறு என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை இனி ஆராய்ந்துதான் பார்க்க வேண்டும். இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவதற்கான கோட்பாடுகளை, காங்கிரஸ் உயர்நிலைக் குழு உருவாக்கும். அதன்மூலம் விரைவில் அனைத்து மாநிலங்களிலும் மீண்டும் பலமான இயக்கமாக காங்கிரஸ் உருவெடுக்கும். அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்களும் ஒருசேர இயக்கப் பணிகளை திறம்பட மேற்கொண்டு கட்சிக்கு வலு சேர்க்க வேண்டும். அதுதான் ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டனின் முதல் கடமையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சேது சமுத்திரத் திட்டம் குறித்த கேள்விக்கு, அந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இருந்தாலும், நல்ல முடிவு கிடைக்கும் என்று நம்புவோம் என்றார்.