

பெருங்களத்தூர் அடுத்த சதானந்தபுரம் பகுதியில் இரவு நேரத்தில் சிறுத்தைப் புலியைப் பார்த்ததாக ஒருவர் கூறியிருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்திவருகின்றனர். சிறுத்தைப் புலி நடமாட்டம் இருக்கிறதா என்று கண்டறிய கேமராக்கள், கூண்டுகளைப் பொருத்தி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
3 ஆயிரம் ஏக்கர் காடு
சென்னை புறநகரான தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் அருகே உள்ள சதானந்தபுரம் பகுதியில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் காடு உள்ளது. இது வண்டலூர் உயிரி யல் பூங்காவையொட்டி உள்ளது. காட்டை ஒட்டி அமைந்துள்ள சதா னந்தபுரத்தில் ஆயிரக்கணக் கானோர் வசிக்கின்றனர். இதற்கு அடுத்து நெடுங்குன்றம் கிராமம், பீர்க்கங்கரணை உள்பட பல கிராமங்கள் உள்ளன. இந்த காட்டுப் பகுதியில் மான், காட்டுப் பன்றி, முயல், நரி போன்ற விலங்குகள் உள்ளன.
‘2 அடி உயரம், 3 அடி நீளம்’
கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9 மணி அளவில் சதானந்தபுரத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் பீர்க்கங்கரணை - நெடுங்குன்றம் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். இந்த சாலையில் வன ஆராய்ச்சி மையம் உள்ளது. அந்த பகுதியில் இருந்து மான் ஒன்று வேகமாக வெளியே ஓடி வந்ததை ரமேஷ் பார்த்துள்ளார். சிறிது தூரம் நடந்துசென்றவர், அங்கு மேலும் பல மான்கள் நிற்பதைப் பார்த்தார். அதே பகுதியில் சுமார் 2 அடி உயரம், 3 அடி நீளத்தில் ஒரு சிறுத்தை புலி நின்றதைப் பார்த்ததாகவும் ரமேஷ் கூறியுள்ளார். இந்த தகவல் தீயாக பரவியதையடுத்து, அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
கால்தடங்கள் இல்லை
இதுதொடர்பாக வன அதிகாரி கிருஷ்ணகுமாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ரமேஷ் கூறிய இடத்துக்கு வந்த வனத்துறை அதிகாரிகள் அப்பகுதி முழுவதும் தீவிரமாக ஆய்வு நடத்தினர். சிறுத்தை புலி நடமாடியதற்கான அறிகுறிகள், சிறுத்தை புலியின் கால்தடம் ஏதேனும் தென்படுகிறதா என்று பார்த்தனர். ஆனால், எதுவும் சிக்க வில்லை. விலங்கு மருத்துவர் களும் வந்து ஆய்வு நடத்தினர்.
கூண்டுகள், கேமராக்கள்
ஒருவேளை சிறுத்தை புலி நடமாடியிருக்கலாம் என்ற சந்தேகத்தில், விலங்குகள் தண்ணீர் குடிக்க வரும் இடம் அருகே 2 கூண்டுகளும், பல இடங்களில் கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. மக்கள் யாரும் காட்டுப் பகுதிக்குள் செல்ல கூடாது என்று எச்சரித்துள்ளனர்.
காட்டுப் பூனையாக இருக்கலாம்
இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘இந்த பகுதியில் சிறுத்தை புலி நடமாட் டம் இருக்க வாய்ப்பு இல்லை. அனேகமாக ரமேஷ் பார்த்தது காட் டுப் பூனையாக இருந்திருக்க லாம். இருப்பினும், பொதுமக்க ளிடம் இருக்கும் பீதியை போக் கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூண்டுகள், கேமராக்களை பொருத்தி கண் காணித்து வருகிறோம். தேடுதல் வேட்டையும் தீவிரமாக நடந்து வருகிறது. கால்நடை மருத்துவர் களை அழைத்து வந்தும் சோதனை நடத்தவுள்ளோம். எனவே சிறுத்தைப் புலி நடமாட்டம் இருப்பதாக மக்கள் பீதி அடைய தேவையில்லை’’ என்றனர்.