Published : 19 Jul 2021 03:14 AM
Last Updated : 19 Jul 2021 03:14 AM

ஆம்பூர் அருகே சிதிலமடைந்த ஆர்மா மலையை மீட்டெடுக்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

ஆம்பூர் அருகே சமூக விரோதிகளின் கூடாரமாகவும், கால்நடை களின் புகலிடமாக மாறியுள்ள பழமை வாய்ந்த ‘ஆர்மா மலையை’ மீட்டு சுற்றுலாத் தலமாக அறிவிக்க மாவட்ட நிர்வாகம் முன் வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மலையாம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பல ஏக்கர் பரப்பில் முற்றிலும் பாறைகளால் ஆன ‘ஆர்மா மலை’ உள்ளது. ஆர்மா மலையின் தெற்கு பகுதியில் பல்வேறு நினைவுச் சின்னங்கள் அடங்கிய குகை ஒன்று உள்ளது.

இந்த குகையின் மேற்பரப்பில் உள்ள பாறைகளில் பல 100 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட வண்ண கலவைகளால் ஆன சிறப்பு மிக்க ஓவியங்கள் காண்போரை வியக்க வைக்கிறது. இங்கு, புதுக் கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசலில் உள்ளதை போன்ற அரிய ஓவியங்கள் காணப்படுகின்றன.

இந்த குகையின் உள்ளே பல்வேறு அறைகள் கட்டப் பட்டுள்ளன. அந்த அறைகள் சுடப்படாத செங்கற்களை கொண்டு கட்டி சுவர் எழுப்பப்பட்டுள்ளது.இங்குள்ள சுவர்களில் காக்கும் தெய்வங்களை வழிபட பாறை களில் புடைப்பு சிற்பங்கள் வடிவமைத்து அதை மக்கள் வணங்கியும் வந்துள்ளனர்.

இம்மலையின் கீழ்பகுதியில் இருந்து மேலே குகைக்கு செல்ல 250-க்கும் மேற்பட்ட படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. நேர்த்தி யான முறையில் அமைக்கப்பட் டுள்ள இப்படிக்கட்டுகளை சுற்றியும் பச்சை, பசேல் என தாவரங்கள் அடர்ந்து ரம்மியமாக உள்ளது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இந்த ஆர்மா மலை உரிய பராமரிப்பு இல்லாததால் சமூக விரோதிகளின் கூடாரமாகவும், கால்நடைகளின் புகலிடமாக மாறி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஆர்மா மலையில் உள்ள பாறைகளில் வரையப்பட்டுள்ள வண்ணக்கலவை ஓவியங்கள் சமூக விரோதிகளால் சேதப்படுத் தப்பட்டுள்ளன. இங்குள்ள பாறைகளில் வடிவமைக்கப்பட்ட புடைப்பு சிற்பங்களும் சேதப்படுத் தப்பட்டுள்ளன.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ‘‘பழமை வாய்ந்த ஆர்மா மலையானது தற்போது கால்நடைகளுக்கு புகலிடமாக மாறிவிட்டது. மலையின் கீழ் பகுதியில் வசிப்போர் தங்களது கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டி வந்து மலையை சுற்றியுள்ள தாவரங்களை உணவாக வழங்கி விட்டு ஆர்மா மலையில் உள்ள குகைகளில் ஓய்வெடுக்கின்றனர். ஒரு சிலர் குகையின் உள்ளேயே ஆடுகளை கட்டி வைத்து அங்கேயே தீவனம் வழங்கி ஆடுகளை பராமரிக்கின்றனர். இதனால், ஆர்மா மலை தனது அடையாளத்தை இழந்து வருகிறது. இங்கு, சட்ட விரோத செயல்கள் நடப்பதோடு பழமை வாய்ந்த குகை பாறைகளை சிலர் சேதப்படுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பல 100 ஆண்டு களுக்கு முன்பு கட்டப்பட்ட பல வரலாற்று சிறப்பு மிக்க மலைக்கோட்டைகள், குகைகள், கட்டிடங்கள் பாதுகாக்கப்பட்டு வருவதைப்போல, திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் ஆம்பூரில் உள்ள பழமை வாய்ந்த ஆர்மா மலையை மீட்டெடுத்து அதை புனரமைத்து சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x