Last Updated : 18 Jul, 2021 05:09 PM

 

Published : 18 Jul 2021 05:09 PM
Last Updated : 18 Jul 2021 05:09 PM

மீனவர்களை பாதிக்கும் சாகர்மாலா திட்டத்தை தடுக்க உரிய நடவடிக்கை: மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உறுதி

நாகர்கோவில்

மீனவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சாகர்மாலா திட்டத்தை தடுப்பதுடன், மீனவர்கள் இடையூறின்றி மீன்பிடிப்பதற்கான வழிமுறைகளை வகுத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கன்னியாகுமரியில் ஆய்வு மேற்கொண்ட மீன்வளத்துறை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழக மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி கடற்கரை கிராமங்களில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

அவர் கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம், மணக்குடி, ராஜாக்கமங்கலம்துறை, அழிக்கால், கடியபட்டணம்,

பெரியவிளை, மண்டைக்காடு, குளச்சல், வாணியக்குடி, தேங்காய்பட்டணம் ஆகிய கடலோர பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது; தமிழகத்தில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளில் வசிக்கும் மீனவர்களுக்கு என்னென்ன பிரச்சினைகள் உள்ளன? என்பதைக் கண்டறிந்து அவற்றை அரசு நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் உட்பட கடற்கரை பகுதிகளை ஆய்வு செய்துள்ளோம்.

சின்னமுட்டம் மீனவர்கள் சாலைகளை அகலமாக்கவேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர். உடனடியாக இதற்கான ஆய்வு மேற்கொண்டு நிதியினை பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். துறைமுகத்தின் இரு புறங்களிலும் படகுகளை நிறுத்துவதற்காக ரூ.40 கோடி மதிப்பில் திட்டவரைவு அமைத்து விரைவில் அதற்கான பணிகள் நடைபெறும்.

கடலில் காணாமல் போன மீனவர்களை தமிழகத்திற்கு அழைத்துவர தமிழக முதல்வர் கவனத்திற்கு எடுத்துசென்று மத்திய அரசு அல்லது மாநில அரசின் வாயிலாகவோ அவர்களை தாய் தமிழகத்திற்கு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சாகர்மாலா திட்டத்தின் மூலம் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்வதற்கு எதிராக பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளனர்.

இதில் மீனவர்களுக்கு மீன்பிடித்தலின்போது அபராதமும் விதிக்கும் முறை உள்ளது. இதனால் சாகர்மாலா திட்டத்தை தமிழக அரசு தடுத்து, மீனவர்கள் கடலில் எந்தவொரு இடையூறு இல்லாமல் மீன்பிடிப்பதற்கான வழிமுறைகளை வகுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு, மீனவர்களுக்கு உறுதுணையாக இருப்போம்.

கல்வி, மீன்பிடி திட்டம், உணவு திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை மத்திய அரசிடமிருந்து, மாநில அரசு கையேந்தி நிற்கின்ற வகையில் திட்டங்களை மத்திய அரசு வகுத்துள்ளது. மீனவர்கள் கடலில் நிம்மதியாக மீன்பிடிக்கச் செல்கின்ற நேரத்தில் சில சமயங்களில் காற்றின் வேகத்தினால் படகுகள் செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

அப்போது அபராதம் விதிக்கின்ற திட்டங்களை மத்திய அரசு வகுக்கின்றது என்றால் அதனை மாநில அரசாங்கம் கடுமையாக எதிர்ப்பதோடு அதனை தடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும். பேரிடர் காலங்களில் மீனவர்கள் கரைக்கு திரும்புவதற்கான நடவடிக்கையை தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இருப்பினும் மீனவர்கள் கடலில் மீன்பிடிப்பதற்காக விதிமுறைகளை மீறி செல்கின்றனர். இதனால் சில பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மீனவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்தார். ஆய்வின்போது தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், மீனவர் நலத்துறை ஆணையர் கருணாகரன், கூடுதல் ஆணையர் சஜ்ஜன்சிங் சவான், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், முன்னாள் எம்.எல்.. ஆஸ்டின் மற்றும் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x