

புதுச்சேரியில் புதிதாக 100 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை 97.58 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் இன்று(ஜூலை 18) வெளியிட்ட தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 6,172 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இவற்றில் புதுச்சேரியில் 75 பேருக்கும், காரைக்காலில் 14 பேருக்கும், ஏனாமில் ஒருவருக்கும், மாஹேவில் 10 பேருக்கும் என மொத்தம் 100 (1.42 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யயப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 19 ஆயிரத்து 703 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் 194 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 930 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 1,124 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மேலும் புதுச்சேரியைச் சேர்ந்த ஒவருர், மாஹேவைச் சேர்ந்த ஒருவர் என 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,778 ஆகவும், இறப்பு விகிதம் 1.49 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. புதிதாக 144 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 16 ஆயிரத்து 801(97.58 சதவீதம் )ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 14 லட்சத்து 25 ஆயிரத்து 914 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 12 லட்சத்து 17 ஆயிரத்து 864 பேருக்கு தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. மேலும், 6 லட்சத்து 37 ஆயிரத்து 634 பேருக்கு (2வது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 குழந்தைகளுக்கு கரோனா
புதுச்சேரியில் தற்போதைய நிலவரப்படி கரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 7 குழந்தைகளுக்கு பரிசோதனை மேற்கொண்டதில், 6 குழந்தைகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 1 முதல் 5 வயதுக்குட்பட்ட 4 குழந்தைகளும், 5 வயதுக்கு மேற்பட்ட 2 குழந்தைகளும் அடங்குவர்.
இதே போல, கரோனா உறுதி செய்யப்பட்ட தாயுடன் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு பச்சிளங்குழந்தையும் உள்ளது. இவர்கள் அனைவரும் புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி பிரத்யேக கரோனா குழந்தைகள் நலப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.