

சுற்றுலாத் தலங்கள் திறக்கப்படாத போதும், வார விடுமுறை தினமான இன்று கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகைதந்தனர். சாரல் மழை, தழுவிச் செல்லும் மேகக் கூட்டங்கள், என இயற்கை எழிலை கண்டு ரசித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு முறையாக இன்னமும் அரசு அனுமதி வழங்கவில்லை. சுற்றுலாத் தலங்களான பிரையண்ட் பூங்கா, ரோஸ் கார்டன், தூண்பாறை, மோயர் பாய்ண்ட், குணாகுகை, பைன்பாரஸ், கோக்கர்ஸ் வாக் மற்றும் ஏரியில் படகுசவாரி ஆகியவை இன்னமும் திறக்கப்படவில்லை. இதனால் சுற்றுலாபயணிகள் சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.
கொடைக் கானலுக்கு பேருந்து போக்குவரத்த தொடங்கியது முதல் சுற்றுலா பயணிகள் சென்றுவர தொடங்கிவிட்டனர். முதலில் கொடைக்கானல் டோல்கேட்டில் வெளியூரை சேர்ந்தவர்கள் கொடைக்கானல் சென்றுவர கரோனா பரிசோதனை என கெடுபிடிகள் காட்டப்பட்ட நிலையில் தற்போது கண்டுகொள்ளப்படாத நிலையே காணப்படுகிறது.
இதனால் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கொடைக்கானல் நுழைவுபகுதியில் உள்ள வெள்ளிநீர்வீழ்ச்சி, பாம்பார்புரத்தில் உள்ள வட்டக்கானல் நீர்வீழ்ச்சி ஆகியவற்றிற்கு தடை இல்லாததால் சுற்றுலாபயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.
ஏரிச்சாலையை சுற்றி குதிரைசவாரி, சைக்கிள் ஓட்டுதல் என பொழுதை கழிக்கின்றனர். பிரையண்ட் பூங்காவிற்குள் செல்ல அனுமதியில்லாததால் வெளிப்புறம் நின்று பூங்காவில் பூத்துக் குலுங்கும் பூக்களைக் கண்டு ரசித்துவிட்டு திரும்புகின்றனர்.
கொடைக்கானலில் பெய்யும் லேசான சாரல் மழையால் இதமான சீதோஷ்ண நிலை நிலவுகிறது. ரம்மியமான காலநிலையில் மலைமுகடுகளில் தவழ்ந்து செல்லும் மேகக் கூட்டங்களின் இயற்கை அழகை கண்டு ரசித்து செல்பி எடுத்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் வருகையால், அவர்களை நம்பியுள்ள சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் மீளத்துவங்கியுள்ளது.
பொது இடங்களில் உலாவரும் சுற்றுலா பயணிகள் பலர் முகக்கவசம் அணிவதில் ஆர்வம் காட்டாதது, உள்ளூர் மக்களுக்கு கரோனா அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
முகக்கவசம் அணியாதவர்கள் மீது நகராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.