ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கொட்டி தீர்த்தது கனமழை

வாணியம்பாடி அடுத்த திருவிகநகரைச் சேர்ந்த ஷான்பாட்சா வீடு மீது மரம் விழுந்ததால் அவரது வீட்டு சுற்றுச்சுவர் சேதமானது.
வாணியம்பாடி அடுத்த திருவிகநகரைச் சேர்ந்த ஷான்பாட்சா வீடு மீது மரம் விழுந்ததால் அவரது வீட்டு சுற்றுச்சுவர் சேதமானது.
Updated on
2 min read

வேலூர் மாவட்டத்தில் கே.வி.குப்பம், பொன்னை உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது.

வேலூர் மாவட்டத்தில் காட்பாடி, வேலூர், பொன்னை போன்ற பகுதிகளில் கனமழையும் மற்றும் இடங்களில் மிதமான மழையும் பெய்தது.

கனமழை காரணமாக காட்பாடி, பொன்னை போன்ற பகுதிகளில் அரை மணி நேரத்துக்கு மின் தடை ஏற்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டத்தை பொறுத்த வரை கலவை, சோளிங்கர், அம்மூர், காவேரிப்பாக்கம் போன்ற பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. ஆற்காடு, அரக்கோணம், வாலாஜா பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

அதேபோல, திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று இரவு 9.30 மணி முதல் 11 மணி வரை இடிமின்னலுடன் கனமழை பெய்தது. திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி, கேதாண்டப்பட்டி போன்ற பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததது.

வாணியம்பாடி பகுதியில் பெய்த கனமழையால் பாலாற்று பகுதிகளில் மீண்டும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அலசந்தாபுரம் பகுதியில் இருந்து அம்பலூர் பாலாறு வரை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதைகாண அப்பகுதி மக்கள் அம்பலூர் பாலாற்றுப்பகுதியில் இன்று காலை குவிந்தனர். சில இளைஞர்கள் பாலாற்று நீரில் இறங்கி விளையாடி மகிழ்ந்தனர்.

வாணியம்பாடி மேட்டுப்பாளையம் பாலாற்றுப்பகுதியிலும், வாணியம்பாடி கீழ் பகுதியில் உள்ள பாலாற்றுப்பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வாணியம்பாடி அடுத்த திரு.வி.க. நகரைச் சேர்ந்த ஷான்பாட்சா (54) என்பவரது வீடு மீது புளியமரம் முறிந்து விழுந்ததால் அவரது வீடு சுற்றுச்சுவர் சேதமானது.

வாணியம்பாடி அடுத்த இருணாப்பட்டு பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் சாலையோரம் இருந்த மரங்கள் முறிந்து விழுந்ததால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைதொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறையினர் அங்கு வந்து மரங்களை அகற்றி போக்குவரத்தை சீர்ப்படுத்தினர்.

திருப்பத்தூரில் நேற்று இரவு பெய்த பலத்த மழையால் சிவராஜ் பேட்டை, ஆரீப் நகர், வள்ளுவர் நகர், கலைஞர் நகர், புதுப்பேட்டை சாலை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் வீடுகளை சூழ்ந்தது.

இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். நேற்று இரவு முழுவதும் தண்ணீர் வடியாததால் பலர் தூக்கத்தை இழந்து வீதியில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. மழைநீருடன் கழிவுநீரும் கலந்து வீடுகளுக்கு நுழைந்ததால் பெண்களும், குழந்தைகளும் மிகவும் அவதிப்பட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் கனமழையால், நகராட்சிக்கு உட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் சாலைகளில் மழைநீர் குட்டைப்போல் தேங்கியுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இன்று காலை 8 மணி நிலவரப்படி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பெய்த மழையளவு விவரம்:

குடியாத்தம் 2.2 மி.மீ., காட்பாடி 20 மி.மீ., மேல் ஆலத்தூர் 4.4 மி.மீ., பொன்னை 8.8 மி.மீ., வேலூர் 12.4 மி.மீ., அரக்கோணம் 8.6 மி.மீ., காவேரிப்பாக்கம் 31 மி.மீ., சோளிங்கர் 18 மி.மீ., வாலாஜா 12 மி.மீ., அம்மூர் 65 மி.மீ., கலவை 65.2 மி.மீ., ஆலங்காயம் 8.20 மி.மீ., ஆம்பூர் 22.4 மி.மீ., வடபுதுப்பட்டு 7 மி.மீ., நாட்றாம்பள்ளி 60 மி.மீ., கேத்தாண்டப்பட்டி 25 மி.மீ., வாணியம்பாடி 22.40 மி.மீ., திருப்பத்தூர் 65.10 மி.மீ., என மழையளவு பதிவாகியிருந்தாது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in