

சட்டப்பேரவையின் இறுதி கூட்டத்தொடர் இன்றுடன் முடிகிறது. நிறைவு நாளான இன்று முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.
கடந்த 2011-ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற அதிமுக, ஆட்சி அமைத்ததும், 14-வது சட்டப்பேரவை அமைந்தது. இதன் பதவிக்காலம் மே 22-ம் தேதியுடன் முடிகிறது. விரைவில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், தேர்தல் வரைக்குமான இடைக்கால பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 16-ம் தேதி தாக்கல் செய்தார்.
இதைத் தொடர்ந்து, அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, பேரவை நிகழ்ச்சிகள் 17-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை தொடர்ந்து நடக்கும் என பேரவைத் தலைவர் தனபால் அறிவித்தார். அதன்படி, இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் தற்போது நடந்து வருகிறது. 14-வது சட்டப்பேரவையின் இறுதி கூட்டத்தொடர் இன்றுடன் முடிகிறது.
இறுதி நாளான இன்று, இடைக்கால பட்ஜெட் மீதான பொது விவாதத்துக்கு நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலுரை ஆற்றுகிறார். 2015-16ம் ஆண்டுக்கான இறுதி துணை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த துணை பட்ஜெட் தொடர்பான மானிய கோரிக்கைகள் மீது வாக்கெடுப்பு மற்றும் நிதி ஒதுக்க சட்ட முன்வடிவு நிறைவேற்றப்படுகிறது. இதுதவிர, சில சட்டத் திருத்தங்களும் நிறைவேற்றப்படுகின்றன.
சட்டப்பேரவை இறுதி கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று, முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.