Published : 04 Feb 2016 03:36 PM
Last Updated : 04 Feb 2016 03:36 PM

உலகத் தரம் வாய்ந்த ஸ்மார்ட் சிட்டி திட்டம்



சென்னையில் குடிநீர் மேலாண்மை, வெள்ள கண்காணிப்பு



கோவையில் 8 குளங்களைக் கொண்ட வளையம்



சென்னை



*

மத்திய அரசு அறிவிக்கும் முதல் 20 மாநகரங்கள் பட்டி யலில் சென்னையும் இடம் பெறும் வகையில், ஜெ.எல்.எல். நிறு வனம், டவுன்லேண்ட் ஆலோசனை நிறுவனம் மற்றும் டாடா கன்சல்டன்சி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து கருத்துருவை உருவாக்கும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது.

3 சுற்றுக்கள், 9 லட்சம் பேர்

இதற்காக பொதுமக்களிடம் 3 சுற்றுகள் கலந்துரையாடி கருத்துகள் கேட்கப்பட்டன. ஆன்லைன் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் இதுவரை 9 லட்சத்து 70 ஆயிரம் பேர் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் ரூ.1366 கோடியில் கருத்துரு உருவாக்கப்பட்டு மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

வெள்ள கண்காணிப்பு

மாநகர் முழுவதையும் மேம்படுத்து வதற்கான கருத்துருவில் வெள்ள கண்காணிப்பு மற்றும் நீர் மேலாண் மைக்கு முக்கியத்துவம் வழங்கப் பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மையின் கீழ், வெள்ளம் மற்றும் சுனாமி கண் காணிப்பு மற்றும் எச்சரிக்கை அமைப்பை உருவாக்குவதற்கான திட்டங்கள், நீர் மேலாண்மையின் கீழ் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய சேவை, மோட்டார் வாகனம் அல்லாத போக்குவரத்து கட்டமைப்பு உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

தியாகராயநகர் தேர்வு

மாநகரின் ஒரு பகுதியை மேம் படுத்தும் திட்டத்தின் கீழ், சென்னை மாநகரின் வர்த்தக தலைமையிடமாக விளங்கும் தியாகராயநகர், பொது மக்கள் வாக்களிப்பின் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பொது மக்களின் பங்களிப்புடன் கருத்துரு தயாரிக்கப்பட்டுள்ளது.

மின் வலையமைப்பை ஸ்மார்ட்டான தீர்வுகள் மூலம் மேம்படுத்துதல், கழிவு களில் இருந்து எரிபொருள், தகவல் தொடர்பை மேம்படுத்துதல், மாற்று திறனாளிகளுக்கு ஏற்ற நடைபாதை. பூங்காக்களில் பசுமை போர்வையை அதிகரித்தல் ஆகிய திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. இத்திட்டங்களை செயல் படுத்த 1717 ஏக்கர் பரப்பளவு பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ரூ.1366 கோடியில் கருத்துரு

மாநகராட்சி வழங்கியுள்ள ரூ.1366 கோடிக்கான கருத்துருவில், மாநக ரம் முழுவதும் மேம்படுத்தும் பிரிவில் மோட்டார் வாகனம் இல்லா போக்கு வரத்து திட்டத்துக்கு ரூ.452 கோடி, குடிநீர் மேலாண்மை திட்டத்துக்கு ரூ.36 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது.

தி.நகரை மேம்படுத்த ரூ.878 கோடி

ஒரு பகுதியை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் தியாகராய நகரை மேம்படுத்த, குடிநீர் விநியோகத்துக்கு ரூ.206 கோடி, ஸ்மார்ட் மின் வலை யமைப்பு திட்டத்துக்கு ரூ.273 கோடி, மோட்டார் வாகனமில்லா போக்குவரத்து திட்டத்துக்கு ரூ.175 கோடி, போக்கு வரத்து மேலாண்மைக்கு ரூ.8.12 கோடி, திடக் கழிவு மேலாண்மைக்கு ரூ.11.16 கோடி, துப்புரவு பணிகளுக்கு ரூ.4.20 கோடி, தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ரூ.50.69 கோடி, கழிவுநீர் அகற்றத்துக்கு ரூ.22 கோடி, பூங்காக்களை சீரமைக்க ரூ.4.95 கோடி என மொத்தம் ரூ.878 கோடி குறிப்பிடப் பட்டுள்ளது.

ரூ.1000 கோடி கிடைக்கும்

இத்திட்டப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு சார்பில் ரூ.500 கோடியும், மாநில அரசு சார்பில் ரூ.500 கோடியும் ஒதுக்கப்பட உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு சார்பில் ரூ.100 கோடி, தமிழக அரசு சார்பில் ரூ.100 கோடி என, 5 ஆண்டுகளுக்கு மாநகராட்சியிடம் வழங்கப்படும். திட் டத்தை நிறைவேற்றத் தேவையான கூடுதல் நிதி ரூ.366 கோடியை, மாநக ராட்சியின் சொந்த நிதியில் இருந்து எடுத்துக்கொள்ளும். அரசு - தனி யார் பங்களிப்புடன், நிதி ஆதாரங்களை ஏற்படுத்தி பல்வேறு புதுமை திட்டங்களை செயல்படுத்திக் கொள்ளலாம்.

திட்டத்தை அமல்படுத்துவது எப்படி?

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல் படுத்த தனி நிறுவனம் ஒன்று தொடங் கப்பட உள்ளது. அந்த நிறுவனத்தின் தலைவராக மாநகராட்சி ஆணையர் இருப்பார்.

அதில் மாநகராட்சி, சென்னை குடிநீர் வாரியம், மின் வாரியம், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், வீட்டு வசதி வாரியம், குடிசை மாற்று வாரியம், காவல்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக இருப்பர்.திட்டத்தின் ஒவ்வொரு பணிகளையும், அனைத்து துறைகளுடனும் கலந்தாலோசித்து நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கப்படும்.



கருத்துரு அடிப்படையில் தேர்வு:

சென்னை மாநகராட்சி தேர்வு செய்யப்பட்ட முறை மற்றும் இத்திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவருவது குறித்து மாநகராட்சி உயரதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:

ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக அனைத்து மாநிலங்களில் இருந்தும் 98 கருத்துருக்கள் அனுப்பப்பட்டிருந்தன. மத்திய நகர்ப்புற மேம்பாட்டு துறை கேட்டிருந்த 48 கேள்விகளை அடிப்படையாக கொண்டு அந்த கருத்துருக்கள் உருவாக்கப்பட்டிருந்தன. சென்னை மாநகராட்சியும் அதன் அடிப்படையில் கருத்துரு அனுப்பியிருந்தது.

அதை மத்திய நகர்ப்புற மேம்பாட்டு துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள், அயல்நாட்டு நிபுணர்கள் ஆகியோர் பங்கேற்று ஒவ்வொரு நகரம் சார்பிலும் வழங்கப்பட்ட கருத்துருக்களை அலசி ஆராய்ந்து மதிப்பீடு செய்தனர். அந்த மதிப்பீட்டின் அடிப்படையில் சென்னைக்கு 18-வது இடம் கிடைத்தது. முதல் 20 நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சியே.





கோவை



*

தமிழகத்தில் இரண்டாவதாக தேர்வு செய்யப்பட்டுள்ள நகரம் கோவை. மாநகரின் மையமாக விளங்கும் எட்டு குளங்களை முன் வைத்து ஸ்மார்ட் சிட்டியை உருவாக்க கோவை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதற்கான திட்ட வரைவு மட்டுமே இப்போது உள்ளது. இதை செயல்படுத்த ஒரு குழு உருவாக்கப்படும். அதில் உயர் அதிகாரிகள், பொறியாளர்கள், சட்ட வல்லுநர்கள், தொழிலதிபர்கள் என பலரும் அங்கம் வகிப்பர். மாநில அரசு வழிகாட்டுதலுக்குப் பின்பே அக்குழு அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி 100 வார்டு களை கொண்டு செயல்பட்டு வருகிறது. 9 ஆண்டுகளுக்கு முன்பு ஜவஹர்லால் நேரு புனரமைப்பு திட்டம் (JNNURM) மூலம் மத்திய அரசிடம் இருந்து ரூ.3,240 கோடி நிதி ஒதுக்கீடு கிடைத்தது. அதில் முதல் தவணையாக ரூ.1,200 கோடியை பெற்று மாநகரம் முழுக்க பாதாளச் சாக்கடைகள், மழைநீர் வடிகால்கள், திடக்கழிவு மேலாண்மை, 3-வது பில்லூர் குடிநீர், நகரத்தில் உள்ள 8 குளங்களை அழகுபடுத்துவது, நீர்நிலை ஓரங்களில் குடியிருப்போருக்கு வேறு இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் என பல்வேறு பணிகளை ஆரம்பித்தது மாநகராட்சி.

இந்த சூழ்நிலை யில்தான் கோவை யில் ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இதன் மூலம் முதல் வருடம் ரூ.200 கோடி, அடுத்தடுத்த 4 ஆண்டுகளில் தலா 100 கோடி என மொத்தம் ரூ.600 கோடி மத்திய அரசு அளிக்கும். அதற்கு இணையாக ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் நிதியும் வரும். ஒரு குறிப்பிட்ட ஏரியாவை எடுத்து திட்டத்தை செயல்படுத்துவது, மொத்த நகரத்துக்கும் தீர்வாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை உருவாக்குவது என்று 2 முறைகளில் திட்ட அறிக்கையை கோவை மாநகராட்சி தயாரித்து அளித் திருந்தது.

குறிப்பிட்ட பகுதியை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் 3 பிரிவுகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யலாம்.

1. ஏற்கெனவே உள்ள பழைய நகரத் தில் உள்ள கட்டிடங்கள் மற்றும் பழ மையான விஷயங்களை முற்றிலும் அகற்றிவிட்டு புதிதாக ஒரு நக ரத்தை உருவாக்குவது.

2. புதிதாக திட்டங்கள் செயல்படுத் தப்பட்ட குறிப்பிட்ட நகரப் பகுதியை தேர்ந்தெடுத்து, அதில் அனைத்து வசதிகளையும் உருவாக்குவது.

3. நகரத்தின் பகுதியிலுள்ள ஒரு நிலப் பகுதியை தேர்ந்தெடுத்து அதில் புத்தம் புதிதாகவே அனைத்து வசதிகளையும் கொண்ட நகரை உருவாக்குவது.

இதில் 2-வது முறையை கோவை தேர்வு செய்துள்ளது. இதன்படி 18 விதமான அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும். இதுதவிர நகரப் பகுதியில் அடுத்தடுத்து அமைந்துள்ள 8 குளங்களை வளையம் போல் இணைத்து அந்த பகுதிகள் சீரமைக்கப் படவேண்டும்.

இச்சாலைக்கு இடையே வேறு சாலைகள், வாய்க்கால்கள் குறுக்கிடும் பகுதிகளில் சிறிய பாலங்கள் அமையும். வழியெங்கும் சோலார் மின்விளக்குகள், வைஃபை வசதிகள், குறிப்பிட்ட பகுதிகளில் பூங்காக்கள், பார்க்கிங் வசதிகள், நவீன கழிப்பிடங்கள் ஏற்படுத்தப்படும். இதில் 30 கி.மீ. தூரத்துக்கு வட்ட வடிவிலான ஸ்மார்ட் சிட்டி உருவாகும்.



எஸ்.ராகவன் - தென்னிந்திய தொழில் வர்த்தக சபை

சென்னையில் ஏற்கெனவே பல்வேறு நாடுகளில் இருந்து அந்நிய முதலீடு வந்து கொண்டிருக்கிறது. சென்னை ஸ்மார்ட் சிட்டியாக மாறினால் சென்னையில் நேரடி அந்நிய முதலீடு குவியும். கடந்த ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.2 லட்சத்து 24 ஆயிரம் கோடியை சென்னையில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலம் இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

ஜி.ராஜேஷ் - ஜெஎல்எல் அசோசியேட் இயக்குநர்

பல்வேறு துறைகள் இணைந்து செய்தால் மட்டுமே இத்திட்டத்தை செயல்படுத்த முடியும். இதற்கு முன்பு ஒரு துறை சார்ந்த கருத்துருவை தான் உருவாக்கி வந்தோம்.

ஸ்மார்ட் சிட்டி தொடர்பான கருத்துருவை உருவாக்க சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்டோம்.

இதற்காக பணியாற்றியது எங்களுக்கு பெரும் சவாலாக இருந்தது.

கீதகிருஷ்ணன் - சென்னை ஐஐடி உதவி பேராசிரியர்

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அதிகளவில் மேம்பாலங்களை கட்டினால் மட்டுமே போதாது. அதிநவீன முறைகளை கையாள்வது அவசியம். அதை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பயன்படுத்த வேண்டும். முதல்கட்டமாக பொது போக்குவரத்தை அதிகரித்து, விரைவாக செல்ல வழி வகுக்க வேண்டும். பேருந்துகளுக்கு என தனி பாதைகள் அமைக்க வேண்டும். தேவையான இடங்களில் சாலைகளை விரிவுப்படுத்த வேண்டும்.

யாஸ்மின் அலி - வழக்கறிஞர்

சென்னையில் சாலைகள் தரமாக இல்லை. அதனால் வேலைக்கு செல்வோர் நேரத்தோடு, அலுவலகங்களுக்கு செல்ல முடிவதில்லை. சாலையோரம் படிந்து கிடக்கும் மணலால் விபத்துகளும் ஏற்படுகின்றன. சென்னையில் சிறந்த சாலைகளை உருவாக்கி, பராமரித்தால் மட்டுமே, ஸ்மார்ட் சிட்டி ‘ஸ்மார்ட்டாக’ இருக்கும்.

ஜவஹர்லால் சண்முகம் - சூழலியல் செயல்பாட்டாளர்

குடியிருப்புகள், தொழிற்சாலைகள், சாலைகள், பஸ் நிலையங்கள் என எவை எங்கு இருக்க வேண்டும் என்று நகர வடிவமைப்பை முதலில் உருவாக்க வேண்டும். அதன் பிறகு, குடிநீர், கழிவுநீர் இணைப்புகளை முறைப்படுத்த வேண்டும். அப்போது தான் ஸ்மார்ட் சிட்டியாக இருக்க முடியும்.

விரிவாக்கப்பட்ட சென்னையில் கழிவுநீர், மழைநீர் வடிகால்களே இல்லை. சென்னையில் எதுவும் முறையாக இல்லை.

எ.த.இளங்கோ - தேவை அமைப்பு

ஸ்மார்ட் சிட்டி திட்டம் வரவேற்கத்தக்கது. மாநகராட்சி கூட்டத்தில், 4 ஆண்டுகளுக்கு முன்பு 5 ஆயிரம் கழிப்பிடங்கள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதுவரை மாநகராட்சி நிர்வாகம் கட்டியது 348 கழிப்பிடங்கள் மட்டுமே. மும்பையில் 1 கோடியே 35 லட்சம் பேர் வசிக்கின்றனர். அங்கு கட்டப்பட்டுள்ள 80 ஆயிரம் கழிப்பிடங்கள் போதவில்லை. இங்கு 900 கழிப்பிடங்கள் தான் உள்ளன. பொதுமக்களின் அடிப்படை வசதிகளை முதலில் நிறைவேற்றவேண்டும்.

அ.வீரப்பன் - அரசு முன்னாள் பொறியாளர்

இத்திட்டம் படித்தவர்களை ஏமாற்றும் ஒரு நாடகம். இதுவரை சென்னை மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் உறுதி செய்யப்படவில்லை. மழைநீர் வடிகால் முழுமையாக அமைக்கப்படவில்லை. ஏழை மக்களுக்கு மருத்துவ சேவைகள் முழுமையாக கிடைக்கவில்லை.

குறைந்த நிலம் உள்ள நாடுகளில் சுரங்கத்தில் மழை நீரை தேக்கி பயன்படுத்துகிறார்கள். இங்கு கிடைக்கும் மழைநீரை தேக்கி வைக்கும் திட்டம் இவர்களிடம் இல்லை.

எஸ்.பாலாஜி - மருந்து விற்பனை நிறுவன மேலாளர்

சென்னையில் தினமும் காலை, மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. மாநகரம் முழுவதும் நெரிசல் இல்லாத போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும்.

வாகன பெருக்கத்துக்கு ஏற்ப சாலைகளை அகலப்படுத்த வேண்டும். சாலைகள் எங்கும் மரங்களை நட்டு பசுமையை உறுதி செய்ய வேண்டும். அப்போது தான் சென்னை ஸ்மார்ட் சிட்டியாக இருக்கும்.

விஜய் கார்த்திகேயன், கோவை மாநகராட்சி ஆணையர்

கோவை ஸ்மார்ட் சிட்டி என்பது தற்போதுள்ள நகர எல்லைக்குள் 4200 ஏக்கர் நிலத்தை, நகரத்தின் 6 சதவீத ஏரியாவை, நகர மக்களில் 14 சதவீதம் பேரை உள்ளடக்கி இருக்கும். கோவை ஸ்மார்ட் சிட்டிக்கு திட்ட அறிக்கை ரூ.1700 கோடியில் அளிக்கப்பட்டுள்ளது என்றாலும் அது அமையும் போது கழிப்பிடம், குடிநீர், திடக்கழிவு மேலாண்மை சுத்திகரிப்பு நிலையங்கள்,குடிநீர் வசதி போன்றவற்றுக்கு பல்வேறு திட்டங்கள் மூலம் வழக்கமாக வரும் நிதியும் பயன்படுத்தப்பட உள்ளது. இது தவிர தனியார் பங்களிப்பும் ஏற்படுத்தப்படுகிறது. அது வாகன நிறுத்தம், பூங்கா, கழிப்பிடங்கள் பராமரிக்கிற பணிகள் மட்டுமானதாக இருக்கும். குறிப்பிட்ட பகுதியை மட்டுமல்லாது ஒட்டு மொத்த மாநகரையும் ஸ்மார்ட் சிட்டியாக்கும் திட்டத்தையும் கோவை மாநகராட்சி வகுத்துள்ளது. அதன்படி அனைத்து பகுதிகளிலும், ஒரு கம்பம் அமைப்பது, அந்த ஒரு கம்பத்திலேயே சோலார் விளக்கு, எல்இடி வீடியோ கேமரா, வைஃபை உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x