

உலகில் உள்ள 37 நாடுகள் உணவு தேவைக்கு இந்தியாவை நம்பியுள்ளன என காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழகத்தில் வேளாண்மை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ‘வேளாண் விளைபொருட்களில் ரசாயனப் படிவுகளைத் தவிர்க்கும் வழிமுறைகள்’ என்ற தலைப்பிலான தேசியக் கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. பல்கலைக்கழக வேளாண் துறை டீன் எஸ்.கணேசன் வரவேற்றார். துணைவேந்தர் எஸ்.நடராஜன் உரையாற்றினார்.
இதில் திருச்சி தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன டீன் டாக்டர் எம்.ஜவஹர்லால் பேசியதாவது: உலகில் உள்ள நாடுகளில் 37 நாடுகள் உணவுத் தேவைக்கு இந்தியாவில் விளைவிக்கப்படும் விளைபொருட்களை நம்பியுள்ளன. ஒரு கோடி பேர் வேளாண் விளைபொருட்களை ஏற்றுமதி செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். காய்கறிகள் மட்டுமின்றி, பாசுமதி அரிசி, டீ, நறுமணப் பொருட்கள் உள்ளிட்டவை ஏற்றுமதி செய்ய ப்படுகின்றன.
தற்போது தாய்ப்பால், தேன் ஆகிய வற்றில்கூட கலப்படம் வந்துவிட்டது. இதற்கு காரணம் விவசாயத்தில் பூச்சிக் கொல்லிகள் என ரசாயனப் பொருட்கள் அதிகளவில் பயன் படுத்தப்படுவதுதான். எந்த அளவு பயன்படுத்தவேண்டும் என்பதைக்கூட விவசாயிகள் அறிந்திருப் பதில்லை.
ஒருங்கிணைந்த பூச்சிநோய் மேலா ண்மை, நீர்மேலாண்மை, உர நிர்வாகம் ஆகியவற்றை கடைப்பிடித்து ரசாயனப் பொருட்களை தவிர்க்கவேண்டும். இதனால் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க ஆர்கானிக் விளைபொருட்களால் முடியும் என்றார்.
ஐ.டி. துறையினரின் விவசாய ஆர்வம்
எம்.ஜவஹர்லால் மேலும் பேசியதாவது: படித்துவிட்டு பலர் தற்போது விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக ஐ.டி. துறையில் பணிபுரிபவர்கள் விவசாயத்தை நோக்கி வருகின்றனர். இவர்கள் விவசாயத்தை முழுமையாக அறிந்து இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஜெர்மனியில் ஐ.டி. துறையில் பணிபுரியும் பொறியாளர் ஒருவர் தமிழகத்தில் இடம் வாங்கி பண்ணை அமைத்து விவசாயம் செய்கிறார். பலர் வேலையை விட்டுவிட்டு வந்தும் முழுவீச்சில் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். விவசாயம் குறித்து அறிவுகளை வளர்த்துக்கொண்டு இவர்கள் விவசாயம் செய்வதால் தரமான, பாதுகாப்பான விளைபொருட்கள் விளைவிக்கப்படுகின்றன என்றார்.