Published : 18 Jul 2021 03:14 AM
Last Updated : 18 Jul 2021 03:14 AM

தமிழக சட்டப் பேரவை தேர்தலில் 75 தொகுதிகளில் திமுக தோல்வி ஏன்?- நிர்வாகிகளிடம் கட்சி தலைமை விசாரணை

மதுரை

பேரவைத் தேர்தலில் திமுக 75 தொகுதிகளில் தோல்வி அடைந்ததற்கான காரணம் குறித்து கட்சித் தலைமையின் உத்தரவுப்படி திமுக நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக தலைமையில் 2 அணிகள் போட்டியிட்டன. இதில்திமுக கூட்டணி 160 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 75 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. 10 மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தில் உள்ள 68 தொகுதிகளில் அதிமுக 44-ல் வென்றது.

கோவை, தர்மபுரியில் உள்ள 15 தொகுதிகளை முழுமையாகவும், சேலத்தில் 11-ல் 10 தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது. தென் மாவட்டங்களில் திமுக கணிசமான வெற்றியைப் பெற்றாலும் திண்டுக்கல்லில் 3, மதுரையில் 5 தொகுதிகளை இழந்தது. கோவை, தர்மபுரிக்கு அடுத்தபடியாக மதுரை தெற்கு மாவட்ட திமுகவில் உள்ள 3 தொகுதிகளையும் முழுமையாக திமுக இழந்தது.

திமுக இழந்த 75 தொகுதிகளில் தோல்விக்கான காரணம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. 5 தொகுதிகளுக்கு ஒரு பிரதிநிதி என 15 பேர் இப்பணியில் ஒருவாரத்துக்கும் மேல் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து திமுக நிர்வாகிகள் கூறியதாவது:

திமுக தோல்விக்கு முக்கிய காரணம் அங்குள்ள நிர்வாகிகள் சரியாகப் பணியாற்றவில்லை என வேட்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் புகார் அளித்துள்ளனர். அதேநேரம் மாவட்டச்செயலாளர்களும், வேட்பாளர்களும் செல்வாக்கு இல்லாமலும், சரியாக செலவு செய்யாமலும், திட்டமிட்டு தேர்தல் பணியாற்றாததால்தான் தோற்க நேர்ந்ததாக திமுக நிர்வாகிகளும் விளக்கம் அளித்துள்ளனர். இதில் எது உண்மை என முழுமையாக விசாரித்து அறிக்கை அளிக்க திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக ஒன்றியச் செயலாளர்கள், புகார் அளித்தவர்களிடம் கட்சியின் பிரதிநிதி விசாரணை நடத்திவருகிறார். புகார்கள் குறித்து ஆதாரத்துடன் விளக்கம் கேட்கப்படுகிறது. தொலைபேசி உரையாடல்கள், வாட்ஸ் அப் தகவல்கள், மாற்றுக் கட்சியினருடன் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களை கட்சியினர் விசாரணை நடத்தும் பிரதிநிதியிடம் அளித்துள்ளனர்.

உறுதியாக வெற்றிபெறும் என நம்பப்பட்ட பல தொகுதிகளில் திமுக தோல்வியடைய நேர்ந்ததற்காக மிக முக்கிய காரணங்கள் பட்டியலிடப்படுகிறது. விசாரணை அறிக்கை மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்கும்போது தோல்விக்குக் காரணம் யார் என்ற விவரம் தெரிந்துவிடும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x