Published : 18 Jul 2021 03:14 AM
Last Updated : 18 Jul 2021 03:14 AM

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே தலையாய கடமை: காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

பெண்களுக்கு பொது இடங்களில் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதை தலையாய கடமையாக கொண்டு செயல்பட வேண்டும்
என்று காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தலைமைச் செயலகத்தில் உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: காவல்துறை என்பது குற்றங்கள் நடக்காத வகையிலான சூழலை உருவாக்கும் துறையாக இருக்கவேண்டும். பெண்கள். குழந்தைகளுக்கு எதிராக குற்றங்களை களைய கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களுக்குபொது இடங்களில் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதை தலையாய கடமையாக கொண்டு செயல்பட வேண்டும். காவலர்களுக்கான விடுப்புகள், சலுகைகள், வீட்டு வசதிக்கான வழிமுறைகளை மேம்படுத்த வேண்டும்.

பேரிடர் காலங்களில் மக்களுக்கு உறுதுணையாக இருக்கும் தீயணைப்புத் துறையினருக்கு பயிற்சியளிப்பதுடன், உபகரணங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பொதுமக்களுக்கும் தீ தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பயிற்று
வித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதிக விபத்து ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து அவற்றை சரிசெய்யும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.

சாலைகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் பாதசாரிகள் பாதுகாப்புக்காக நடைபாதைகளை ஏற்படுத்த வேண்டும். வட்டார போக்குவரத்து அலுவலகம், ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில் மாதிரி வாகன வடிவம் வழங்குவதுடன், அதற்கான பயிற்சியை மேம்படுத்துதல் வேண்டும்.

அதிக வாகன விபத்துக்கள் நிகழும் இடங்களுக்கு அருகே உள்ள கடைகள், உணவகங்களில் உள்ளவர்களுக்கு முதலுதவி செய்யும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்க வேண்டும். சிறைவாசிகளால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், தோட்ட உற்பத்தி
பொருட்களை விற்பனை செய்ய அமைக்கப்பட்டுள்ள சிறை அங்காடியின் செயல்பாடுகளை நன்கு விரிவுபடுத்த வேண்டும்.

மதுவிலக்குத் துறை சார்பில் மது அருந்துதல் மற்றும் போதைபழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்கள், சுய உதவி
குழுக்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கள்ளச்சாராயம் காய்ச்சுவதை முற்றிலும் தடுக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற உள்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x