

போரூர் ஏரியில் குப்பைகள், மருத்துவக் கழிவுகளைக் கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர்மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள தியாகிகள் மணிமண்டபத்தில் உள்ள தியாகிகள் செண்பகராமன், ஆர்யா என்கிற பாஷ்யம், சங்கரலிங்கனார் சிலைகளுக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவர்களின் படங்களுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
போரூர் ஏரியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் போரூர் ஏரியில் மண்ணைக் கொட்டி மூடும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. அந்த ஏரி சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருப்பதால், ஏரியை மூடக்கூடாது என்று திமுகபோராட்டம் நடத்தியது. தற்போது, அந்த ஏரியின் மீது அக்கறை வந்து, மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதாக கூறியுள்ளார். அங்கு மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டால் அது தடுத்து நிறுத்தப்படும்.
11 புதிய மருத்துவக் கல்லூரிகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்யவுள்ளனர். அதன்பின்னர், அந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியாகும். தற்காலிகமாக மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான 150 மாணவர்களை மதுரை அரசு மருத்துவக் கல்லூரி, தனியார் மருத்துவக் கல்லூரி, ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் என ஏதாவது ஒன்றில் சேர்க்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதை தமிழக அரசு ஏற்கவில்லை. சிவகங்கை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை பிரித்து சேர்க்கலாம் என்ற கருத்து தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையடுத்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிகாரிகளுடன் போரூர் ஏரிக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “252 ஏக்கர் கொண்ட போரூர் ஏரியில் 50 ஏக்கர் அளவுக்கு மட்டும் நீர் நிலைகள் உள்ளன. 200 ஏக்கருக்கு குப்பைகள், கருவேல மரங்கள்உள்ளன. மருத்துவக் கழிவுகள்,கருவேல மரங்கள், குப்பைகளை அகற்றி சுற்றுச்சுவர் எழுப்பி குடிநீர் ஆதாரமாக பயன்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இனி போரூர் ஏரியில்குப்பை, மருத்துவக் கழிவுகளைகொட்டினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.