

சென்னையில் முகக்கவசம் அணியும் பழக்கம் அதிகரித்துள்ளதாக ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிசைப் பகுதிகளில் முகக்கவசம் அணிந்து கொள்வோர் 41 சதவீதமாகவும், மற்ற பகுதிகளில் 47 சதவீதமாகவும் அதிகரித்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவன (ICMR) பொது சுகாதார வல்லுநர் பிரப்தீப் கவுர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
3 கட்ட ஆய்வுகள்
சென்னை மாநகராட்சி, ஐசிஎம்ஆர் நிறுவனத்தின் தேசிய நோய்த்தொற்று அறிவியல் மையம் ஆகியவை இணைந்து சென்னையில் முகக்கவசம் அணியும் பழக்கம் மக்கள் மத்தியில் எப்படி உள்ளது என ஏற்கெனவே 3 கட்ட ஆய்வுகளை முடித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற முதற்கட்ட ஆய்வில் குடிசைப் பகுதிகளில் 28 சதவீதம் பேரும், மற்ற பகுதிகளில் 36 சதவீதம் பேரும் முகக்கவசம் அணியும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர்.
கடந்த டிசம்பரில் நடைபெற்ற 2-ம் கட்ட ஆய்வில் குடிசைப் பகுதிகளில் 29 சதவீதமாகவும், மற்ற பகுதிகளில் 35 சதவீதமாகவும் இது இருந்தது. இந்த ஆண்டு மார்ச்சில் நடைபெற்ற 3-ம் கட்ட ஆய்வில் குடிசைப் பகுதிகளில் 21 சதவீதம் பேரும், மற்ற பகுதிகளில் 27 சதவீதம் பேரும் முகக்கவசம் அணிந்திருந்தனர்.
64 தெருக்களில்
இம்மாதம் 8 முதல் 10-ம் தேதி வரை நடத்தப்பட்ட 4-ம் கட்ட ஆய்வில், குடிசைப் பகுதிகளில் முகக்கவசம் அணிந்துகொள்வோர் 41 சதவீதமாகவும், மற்ற பகுதிகளில் 47 சதவீதமாகவும் அதிகரித்துள்ளனர்.
இந்த 4 கட்ட ஆய்வுகளும், தேர்வு செய்யப்பட்ட 64 தெருக்களில் வெளிப்புறங்களில் இருந்து 3,200 பேரிடமும், அறைகளுக்குள் இருந்த 1,280 பேரிடமும் நடத்தப்பட்டது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.