

கும்மிடிப்பூண்டி அருகே குளத்தில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு அறிவித்த ரூ.25 லட்சம் நிவாரணத் தொகையை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த கரும்புகுப்பம் கிராமத்தில், கடந்த 14-ம்தேதி குளத்தில் மூழ்கி சுமதி, அஸ்விதா ஜோதிலட்சுமி, ஜீவிதா,நர்மதா ஆகிய 5 பேர் உயிரிழந்தனர். இதை அறிந்த தமிழக முதல்வர், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து ரூ.25 லட்சத்துக்கான காசோலைகளை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர்உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களிடம் நேற்று வழங்கினர்.
பின்னர், அமைச்சர் நாசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எதிர்காலத்தில் இதுபோன்ற ஒரு துயர சம்பவம் நிகழாமல் இருக்க குளத்தைச் சுற்றி உடனடியாக பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், மாவட்டத்தின் அனைத்து இடங்களில் உள்ள குளங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும். குறிப்பாக சேறு நிறைந்து ஆழம் அதிகம் உள்ள இடங்களில் முறையான பாதுகாப்பு ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றார்.
பின்னர், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தில் 2 மாற்றுத் திறனாளிகளுக்கு, தலா ரூ.74,500 மதிப்பில் மொத்தம் ரூ.1.49 லட்சம் மதிப்பில் ஸ்கூட்டர்களை வழங்கினார்.
முன்னதாக, பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம் கொளப்பன்சேரி ஊராட்சி குளத்தில், தனியார் தொண்டு நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதி ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கரைகளை பலப்படுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.