

புற்றுநோய் தடுப்புக்கான சிறப்புத் திட்டங்களை மத்திய அரசு வகுக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தையொட்டி இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''புற்றுநோயை உயிர்க்கொல்லி நோய் என்று பொதுமக்கள் அச்சத்தோடு பார்க்கும் நிலை உள்ளது. ஆனால், இந்நோய் வராமல் தடுக்க முடியும். சிகிச்சை அளித்து முழுமையாக குணப்படுத்தவும் முடியும் என்பதை ஆய்வுகளின் அடிப்படையில் மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.
2000-ம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற மாநாட்டில் எடுத்த முடிவின்படி, 2005-ம் ஆண்டு முதல் பிப்ரவரி 4-ம் தேதியை புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக உலக நாடுகள் அனுசரித்து வருகின்றன. 1976-ம் ஆண்டு முதலே இந்திய அரசு தேசிய புற்றுநோய் தடுப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை குறிப்பிட்ட நாளில் மட்டும் செய்யாமல், புற்றுநோய் வருவதற்கான ஆரம்ப அறிகுறிகள், தாமதிக்காமல் மருத்துவ நிலையத்தை அணுகுதல், தகுந்த சிச்சை பெறுதல் ஆகியவை பற்றிய விழிப்புணர்வை ஆண்டு முழுவதும் மக்களிடம் பரப்ப வேண்டும்.
மேலும், மத்திய அரசு புற்றுநோய் தடுப்பு, சிகிச்சை மற்றும் மறுவாழ்வுக்கான சிறப்புத் திட்டங்களை வகுக்க வேண்டும். தமிழக அரசும் இப்பணியில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்'' என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.