தமிழகத்துக்கு தண்ணீர் செல்வதை முழுமையாக தடுக்க புல்லூரில் பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டப்படும்: ஒய்.எஸ்.ஆர். கட்சி நிர்வாகி பேச்சுக்கு பாலாறு பாதுகாப்பு ஆர்வலர்கள் எதிர்ப்பு

தமிழக-ஆந்திர எல்லையான புல்லூரில் பாலாற்றின் குறுக்கே கட்டப் பட்டுள்ள தடுப்பணை (கோப்புப்படம்).
தமிழக-ஆந்திர எல்லையான புல்லூரில் பாலாற்றின் குறுக்கே கட்டப் பட்டுள்ள தடுப்பணை (கோப்புப்படம்).
Updated on
2 min read

தமிழக-ஆந்திர எல்லையான புல்லூரில் பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டப்படும் என ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகி தெரிவித்துள்ள நிலையில் தமிழக அரசு இந்தப் பிரச்சினையில் உடனடியாக தலையிட வேண்டும் என்று பாலாறு பாதுகாப்பு இயக்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உற்பத்தியாகி ஆந்திர மாநிலத்தில் சுமார் 28 கி.மீ ஓடி வரும் பாலாறு, தமிழகத்தில் 222 கி.மீ தொலைவுக்கு பயணிக்கிறது. இதில், ஆந்திர மாநிலத்தில் பாலாற்றின் குறுக்கே 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பணை கட்டியதுடன் ஏற்கெனவே இருந்த பல தடுப்பணைகளின் உயரத்தையும் அதிகரித்துள்ளனர். குப்பம் தொகுதிக்கு உட்பட்ட கணேசபுரத்தில் அணை கட்டுவதற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் குப்பம் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தொகுதி பொறுப்பாளர் பரத் என்பவர் புல்லூர் தடுப்பணை பகுதியில் உள்ள கனகநாச்சியம்மன் கோயிலில் இரு தினங்களுக்கு முன்பு சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

அப்போது அங்கிருந்த பொது மக்களிடம் பேசிய பரத், ‘‘புல்லூர் தடுப்பணையில் இருந்து ஆந்திர மாநிலத்துகான தண்ணீர் வீணாக தமிழக பாலாறுக்கு செல்வதை கடந்த ஒரு வாரமாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவி வருகிறது.

தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கை (கணேசபுரம் அணை) தள்ளுபடி செய்ய முயற்சி எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மிதுன்ரெட்டி, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெத்திரெட்டி ராமச்சந்திரரெட்டி ஆகியோரிடம் பேசி இருக்கிறேன். அவர்கள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் பேசி அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர். நீதிமன்ற வழக்கை முடித்து உரிய அனுமதி பெற்று இங்கு அணை கட்டப்படும். புல்லூரில் அணை கட்டுவதால் 0.6 டிஎம்சி தண்ணீர் சேமித்து குப்பம் தொகுதியில் உள்ள 4 மண்டலங்களில் குடிநீர், விவசாய பணிகளுக்கு தண்ணீர் பிரச்சினை இருக்காது’’ என்று தெரிவித்தார்.

பரத்தின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாலாறு நீர்வள ஆர்வலர் அம்பலூர் அசோகன், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்போது, ‘‘ஏற்கெனவே குப்பம் கணேசபுரத்தில் அணை கட்டும் திட்டத்துக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை முந்தைய அரசு ஆமை வேகத்தில் ஒப்புக்கு நடத்தி வந்தது.

இப்போது பொறுப்பேற்றுள்ள நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன், ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து பேசியபோது பாலாறு குறித்தும் பேசி இருந்தால் பரத் போன்றவர்கள் இப்படி பேச மாட்டார்கள். இந்தப் பிரச்சினையில் தமிழக முதல்வர் உடனடியாக ஆந்திர மாநில முதல்வரிடம் பேச வேண்டும்’’ என தெரிவித்தார்.

தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் மாநில பொதுச்செயலாளர் ஏ.சி.வெங்கடேசன் கூறும்போது, ‘‘ஆந்திர அரசு பாலாற்றில் தமிழகத்தின் உரிமையை அபகரித்ததுடன் பாலாற்றில் 29 இடங்களில் தடுப்பணை கட்டியுள்ளனர். இப்போது, புதிய அணை கட்டுவோம் என்று கூறுவதை ஏற்க முடியாது.

தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in