

சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தல் தாமதமாக நடந்ததால், அதற்குரிய நிதி ரூ.23 கோடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்குச் சென்றது. அங்கு செலவானதுபோக மீதியுள்ள ரூ.8 கோடியைத் தருமாறு மாவட்ட கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் மொத்தமுள்ள 16 மாவட்ட ஊராட்சி வார்டுகளில், அதிமுக கூட்டணி 8 இடங்களிலும், திமுக கூட்டணி 8 இடங்களிலும் வென்றன. அதிமுக, திமுக கூட்டணி சமபலத்தில் இருந்ததால் தலைவர், துணைத் தலைவர் தேர்தலில் இழுபறி ஏற்பட்டது.
இதனால் கடந்த ஆண்டு ஜன.11-ம் தேதி நடக்க வேண்டிய தேர்தல் நான்கு முறை தள்ளி வைக்கப்பட்டு, டிச.11-ம் தேதி நடத்தி முடிக்கப்பட்டது. இதில் அதிமுகவைச் சேர்ந்த பொன்.மணிபாஸ்கரன் தலைவராகவும், சரஸ்வதி அண்ணா துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்தல் ஓராண்டு தாமதமாக நடந்ததால் மாவட்ட ஊராட்சிக்கு ஒதுக்கிய ரூ.23 கோடி நிதி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்குச் சென்றது.
அந்த நிதியில் சாலை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ரூ.15 கோடி செலவிடப்பட்டது. தற்போது அதில் ரூ.8 கோடி செலவழிக்காமல் உள்ளது. இதையடுத்து அந்த நிதியை மீண்டும் மாவட்ட ஊராட்சிக்கு ஒதுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து மாவட்ட கவுன்சிலர்கள் சிலர் கூறுகையில், ''தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடக்காவிட்டாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் இருக்கையில், எங்களிடம் கேட்காமலேயே நிதியை அதிகாரிகள் மாற்றிவிட்டனர். இது விதிமுறை மீறியது. இதனால் மீதி இருக்கும் ரூ.8 கோடியாவது மாவட்ட ஊராட்சிக்குத் தர வேண்டும்'' என்றனர்.