Published : 17 Jul 2021 07:38 PM
Last Updated : 17 Jul 2021 07:38 PM

8ஆம் வகுப்பிலிருந்தே போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும்: டாக்டர்கள் சங்கம் கோரிக்கை

“நமது மாணவர்களைப் போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்ய வேண்டியது அவசியம். ஏற்கெனவே நடத்தப்படும் பயிற்சி மையங்களின் தரத்தை மேம்படுத்த வேண்டும். வட்டாரம் தோறும், தங்கும் வசதி மற்றும் இலவச உணவு வசதியுடன் கூடிய பயிற்சி மையங்களைத் தமிழக அரசு உருவாக்க வேண்டும். இது கிராமப்புற மாணவிகள் போட்டித் தேர்வுகளில் பங்கேற்று நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற உதவும்” என டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கப் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் இன்று வெளியிட்ட அறிக்கை:

“*நீட் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு பெற தமிழ்நாடு அரசு கடுமையான முயற்சிகளை எடுத்துவருவது பாராட்டுக்குரியது.

* நீட் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு பெறுவதில் வெற்றி பெற்றாலும் கூட, சில நடவடிக்கைகளை இந்தக் கல்வி ஆண்டு முதலே எடுப்பதன் மூலம் மாணவர்களுக்கு பல்வேறு பயன்கள் கிடைக்கும்.

* நீட் நுழைவுத் தேர்வு வந்தபின் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள் மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பிப்பதும், தேர்வு பெறுவதும் குறைந்துள்ளது.

* நீட் நுழைவுத் தேர்வில் விலக்கு பெற்றாலும் கூட தமிழ் வழி மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து விடுவார்கள் எனக் கூற முடியாது.

* பள்ளிக் கல்வி மிக வேகமாக தனியார் மயமானது, தனியார் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி குறைந்து போனது, அரசுப் பள்ளிகளின் தரம் வீழ்ச்சியடைந்தது.

* அரசுப் பள்ளிகளில் மட்டுமே பெரும்பாலும் தமிழ்வழிக் கல்வி தொடர்வது போன்ற பல்வேறு பிரச்சினைகள் இதற்குக் காரணமாக இருந்தாலும், நீட் நுழைவுத் தேர்வும் ஒரு காரணமாக உள்ளது.

நீட் தேர்விற்குப் படிப்பதற்கான நூல்கள் போதிய அளவில் தமிழில் இல்லை என்பதும்,பல சிறந்த தனியார் பயிற்சி மையங்கள் ஆங்கிலத்திலேயே செயல்படுவதும் தமிழ்வழியில் படிக்கும் மாணவர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவை நீட்டில் உருவாக்கியுள்ளது. எனவே, தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும்.

ஏற்கெனவே, தமிழக அரசு, வேலை வாய்ப்பில் தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிடுவதற்கான சட்டம் (The Tamil Nadu Persons Studied in Tamil Medium Act 2010) மூலம் 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி வருகிறது. அதைப் போல், மருத்துவக் கல்வி உட்பட அனைத்து தொழிற் கல்லூரிகளிலும், உயர் கல்வியிலும், தமிழ் வழியில் பள்ளிப் படிப்பைப் படிப்பவர்களுக்கு, குறைந்தபட்சம் 10 விழுக்காடு இடங்களையாவது, அனைத்து ஒதுக்கீட்டு இடங்களிலும் உள் ஒதுக்கீடாக வழங்கிட வேண்டும்.

இதன் மூலம் அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் பயன்பெற முடியும். ஏனெனில் இப்பள்ளிகளில் 70 விழுக்காட்டு மாணவர்கள் தமிழ் வழியில்தான் படிக்கிறார்கள். அது மட்டுமன்றி, அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் 72 விழுக்காட்டினர் எஸ்.சி, எஸ்.டி எம்.பி.சி பிரிவு மாணவர்கள் ஆவர்.

எனவே, தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதன் மூலம் இச் சமூகங்களைச் சேர்ந்தவர்களிடையே உள்ள, பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியோர் மருத்துவக் கல்லூரிகளில் அதிக அளவில் சேர முடியும்.

ஆங்கில வழிக் கல்வி மோகத்தைக் குறைத்து, தமிழ் வழியில் குழந்தைகளைப் படிக்க வைக்கலாம் என்ற ஆர்வம் பெற்றோரிடம் ஏற்பட உதவிடும். தமிழ்த் தேசிய இனத்தின் மொழியான தமிழ் மொழி மற்றும் பண்பாட்டைக் காத்து, வளர்த்திட உதவிடும். எனவே, தமிழக அரசு இந்தக் கல்வி ஆண்டிலிருந்தே தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு குறைந்தது 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டையாவது நடைமுறைப்படுத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

* கடினமான மற்றும் மலைப் பகுதிகளில் வசித்து, அதே பகுதி பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும். இவ்விடங்களை அனைத்து ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளேயும் உள் ஒதுக்கீடாக வழங்கிட வேண்டும். MCI PG Medical Education Act 2017 amendment படி கடினமான மற்றும் மலைப் பகுதிகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கு, நீட் மதிப்பெண்ணுடன் கூடுதல் சலுகை மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

* முதல் தலைமுறைப் பட்டதாரியாக மருத்துவம் பயில வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதற்கான காரணங்களை ஆராய்ந்து சரிசெய்ய வேண்டும். நீட் தேர்வும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். எனவே அத்தகைய மாணவர்களுக்கு தனி உள் ஒதுக்கீடாக 5 விழுக்காடு இடங்களை வழங்கிட வேண்டும்.

* தற்பொழுது வழங்கப்படும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு தொடர வேண்டும். மேலும் , அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்குத் தனியாக 5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும்.

* தமிழக அரசின் ஒதுக்கீட்டிற்கான இடங்களில் , மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) மாணவர்கள் அதிக இடங்களைப் பெற்றுவிடுவது, தமிழ்நாடு அரசின் பாடத் திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களைப் பெருமளவில் பாதிக்கிறது.

இதைத் தடுத்திட தமிழக அரசின் ஒதுக்கீட்டிற்கான 85 விழுக்காடு இடங்களில் 15 விழுக்காட்டை சிபிஎஸ்இ மாணவர்களுக்கும் 85 விழுக்காட்டை மாநிலப் பாடத்திட்டத்தில் படித்திடும் மாணவர்களுக்கும் ஒதுக்கீடு செய்திட புரோரேட்டா ஒதுக்கீட்டிற்கான அரசாணையை 22.06.2017-ல் தமிழக அரசு வெளியிட்டது. அதை சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் ரவிச்சந்திரபாபு ரத்து செய்துவிட்டார்.

மாணவர் சேர்க்கை தொடர்பான முடிவுகளை இந்திய மருத்துவக் கவுன்சில்தான் எடுக்க வேண்டும். மாநில அரசிற்கு உரிமை இல்லை. நிர்வாக உத்தரவு மூலம் இட ஒதுக்கீடு வழங்கிட இயலாது. அரசியல் சட்டம் பிரிவு 14-க்கு எதிராக உள்ளது என்ற காரணங்களைக் கூறி ரத்து செய்தார்.

ஆனால், முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீடு ( Service Quota) பிரச்சினையில், இட ஒதுக்கீடு தொடர்பான விசயங்களில், மாநில அரசுகள் முடிவு எடுக்க முடியும் என உச்ச நீதிமன்றத்தின், நீதிபதி அருண் மிஷ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு 2020-ல் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மற்றும் பல மாநிலங்களில், தனியார் நிறுவன வேலை வாய்ப்புகளில் அந்த மாநிலத்தவருக்காக தனி ஒதுக்கீடு வழங்கிட சட்டம் இயற்றப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ என்பது மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் மாணவர்களுக்கானது என சிபிஎஸ்இ கூறியுள்ளது. எனவே, தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த தமிழக மாணவர்களுக்குத் தனி ஒதுக்கீடு செய்வதில் தவறில்லை. எனவே, இவை குறித்து சட்ட வல்லுநர்களைக் கலந்து ஆலோசித்து, சட்டம் கொண்டுவர வேண்டும்.

* அரசுப் பள்ளி ,அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு விண்ணப்பக் கட்டணம், நுழைவுத் தேர்விற்குச் சென்று வருவதற்கான போக்குவரத்து வசதி, தங்கும் வசதி போன்றவற்றைத் தமிழக அரசே ஏற்க வேண்டும்.

* தமிழ்நாடு அரசு நடத்திவரும் 412 நீட் தேர்வு பயற்சி மையங்ளை மேம்படுத்த வேண்டும். அவற்றின் தரத்தை அதிகரிக்க வேண்டும்.

* அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும். கடந்த ஆட்சிக் காலத்தில் 2000க்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக விடப்பட்டதாக கூறப்படுகிறது. அக்காலிப் பணியிடங்களை நிரப்ப தற்போதைய அரசு நடவடிக்கை எடுத்து வருவது வரவேற்புக்குரியது. அப்பணி நியமனங்களை விரைவுபடுத்திட வேண்டும்.

* பட்டியலின (SC/ST) மாணவர்களுக்கான (Post matric scholarship) கல்வி உதவித்தொகை முறையாக வழங்கப்படவில்லை. அதை முறையாக வழங்கிட வேண்டும். கடந்த ஆட்சியில் இந்த உதவித்தொகை முறையாகக் கிடைக்காததால் ஏராளமான மாணவர்கள் படிப்பைத் தொடர முடியவில்லை. கல்லூரிகளில் சேரத் தயங்குகின்றனர்.

பொறியியல் படிப்புகளில் எஸ்.சி,எஸ்.டி மாணவர்களின் சேர்க்கை 50 விழுக்காடு வீழ்ச்சி அடைந்துள்ளது. எனவே, இதில் அரசு கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும். இந்த உதவித்தொகையை அதிகரிப்பதோடு, இதைப் பெறுவதற்கான ஆண்டு குடும்ப வருமான உச்சபட்ச வரம்பை ரூ 8 லட்சமாக உயர்த்திட வேண்டும்.

* தொடர்ந்து போட்டித் தேர்வு பயிற்சி மையங்களை அரசு நடத்த வேண்டுமா? தமிழக அரசு மருத்துவப் படிப்பிற்கு மட்டுமல்லாமல் மற்ற படிப்புகளுக்கும் போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையத்தை நடத்தி வருகிறது.

வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வி இடங்கள் குறைவாகவும், போட்டியாளர்கள் எண்ணிக்கை அதிகமாகவும் இருப்பதால், மத்திய அரசின் கல்வி மற்றும் இதர நிறுவனங்களில் படிப்பதற்கும், வேலை வாய்ப்பிற்கும் போட்டித் தேர்வுகள் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. எனவே, தமிழ்நாட்டு மாணவர்களுக்கு 8ஆம் வகுப்பு முதலே போட்டித் தேர்விற்குத் தயார் ஆகும் வகையிலும் பயிற்சிகளை வழங்கிட வேண்டும்.

மத்திய அரசின் கட்டுப் பாட்டில் உள்ள உயர்கல்வி இடங்களுக்கு போட்டித் தேர்வு என்பது தவிர்க்க முடியாத ஒன்று.மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உயர்கல்வி நிறுவனங்களும், தனியார் நிகர் நிலை பல்கலைக் கழகங்களும் இருப்பதால் மத்திய அரசு ஒரு நுழைவுத் தேர்வை நடத்த வேண்டியுள்ளது.

பல்வேறு மாநிலங்களில் பல்வேறு வகையிலான பாடத்திட்டம், தரம், தேர்வில் மதிப்பெண் வழங்கும் முறை போன்றவை இருக்கும் பொழுது, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலோ, இறுதியாண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் (MBBS,BDS) மதிப்பெண் அடிப்படையிலோ மாணவர் சேர்க்கையை நடத்திட முடியாது. எனவே, மத்திய அரசு ஒரு நுழைவுத் தேர்வை நடத்தியே ஆக வேண்டும்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரக்கூடிய உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசுக்குச் சொந்தமான உயர் கல்வி நிறுவனங்களில் உள்ள ஏறத்தாழ 2 லட்சத்திற்கு மேற்பட்ட இடங்களில், ஒரு இந்தியர் என்ற முறையில தமிழ்நாட்டு மாணவர்களும் படிக்கும் உரிமை உண்டு.

அந்த இடங்களில் பல ஆண்டுகாலமாகவே தமிழக மாணவர்கள் 2% குறைவாகவே பயில்கின்றனர் என்பது வருந்தத்தக்கது. எனவே, இந்த நிறுவனங்களிலும் நமது மாணவர்கள் அதிக அளவில் சேர வேண்டும்.

அதற்கு நமது மாணவர்களை போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்ய வேண்டியது அவசியம். ஏற்கெனவே நடத்தப்படும் பயிற்சி மையங்களின் தரத்தை மேம்படுத்த வேண்டும். வட்டாரம் தோறும், தங்கும் வசதி மற்றும் இலவச உணவு வசதியுடன் கூடிய பயிற்சி மையங்களை தமிழக அரசு உருவாக்க வேண்டும். இது கிராமப்புற மாணவிகள் போட்டித் தேர்வுகளில் பங்கேற்று நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற உதவும்.

எனவே, இப்பிரச்சினையிலும் தமிழ்நாடு அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது”.

இவ்வாறு ஜி.ஆர்.ரவீந்திரநாத் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x