கரோனா: மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள வணிக வீதிகளைக் காலி செய்யும் வணிக நிறுவனங்கள்

கரோனா: மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள வணிக வீதிகளைக் காலி செய்யும் வணிக நிறுவனங்கள்
Updated on
2 min read

கரோனா காலத்தில் மீனாட்சிம்மன் கோயிலைச் சுற்றியுள்ள வணிக நிறுவனங்கள், அதனைக் காலி செய்துவிட்டு மாற்று இடங்களை நோக்கி இடம்பெயர ஆரம்பித்துள்ளன. அதனால், வாடகைக்குக் கட்டிடங்களே கிடைக்காத மாசி வீதிகள், வெளி வீதிகளில் தற்போது வழக்கத்திற்கு மாறாக ‘டூலெட்’ போர்டுகளை அதிக அளவு காண முடிகிறது.

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில், சர்வதேச ஆன்மிக சுற்றுலாத் தலமாகவும், மதுரையின் பெருமையாகவும் பார்க்கப்படுகிறது. நாட்டிலே உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஆன்மிக சுற்றுலாத் தலங்களில் மீனாட்சியம்மன் கோயில் முதன்மையாகவும் உள்ளது. அதனால், மீனாட்சியம்மன் கோயில் இயல்பாகவே தென் தமிழகத்தின் வர்த்தக மையமாகவும் திகழ்கிறது.

மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள், இந்தக் கோயிலைச் சுற்றியுள்ள ஆவணி மூல வீதிகள், மாசி வீதிகள், வெளி வீதிகள், டவுன் ஹால் ரோடு, நேதாஜி ரோடு உள்ளிட்ட வீதிகளில் உள்ள கடைகளுகளுக்கு ஷாப்பிங் செல்வார்கள். அதனால், இந்த வீதிகளில் மிகப்பெரிய கார்ப்பரேட் ஜவுளிக்கடைகள், நகைக் கடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனைக் கடைகள், மோட்டார் எலக்ட்ரிக் உதிரிபாகங்கள் விற்பனை நிறுவனங்கள் மற்றும் உணவுப்பொருள் மொத்த வியாபார நிறுவனங்களில் ஆரம்பித்து சிறு, குறு வியாபார நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன.

சுற்றுலாப் பயணிகளைத் தவிர்த்து மதுரை மட்டுமில்லாது, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் இருந்தும், திருநெல்வேலி, கன்னியாகுமரியில் இருந்தும்கூட இங்கு மக்கள், ஆண்டு முழுவதும் இங்கு பொருட்கள் வாங்க வருவார்கள். அதனால், சென்னை ரங்கநாதன் தெரு போல், மீனாட்சியம்மன் கோயில் மாசி வீதிகள், வெளிவீதிகள் எப்போதும் மக்கள் கூட்டத்தால் திருவிழாபோல் காணப்படும். பண்டிகை நாட்களில் இந்த வீதிகளில் ஒட்டுமொத்தப் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டு, மக்கள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு நெரிசல் காணப்படும்.

அதனால், தினமும் பல கோடி ரூபாய் அளவுக்கு இந்த வீதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில் வியாபாரம் நடக்கும். அதனால், கடைகள் கிடைத்தாலே போதும் என்று வாடகையைப் பற்றி வியாபாரிகள் கவலைப்படமாட்டார்கள். அந்த அளவுக்கு மீனாட்சியம்மன் கோயிலால் இந்த நிறுவனங்களில் ஆண்டு முழுவதுமே வியாபாரம் களைகட்டும். அதனால், இந்த வீதிகளில் அமைந்துள்ள கட்டிடங்கள் வாடகைக்குக் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கும்.

கரோனா ஊரடங்கால் தூங்கா நகரமான மதுரை மாநகரமும் முடங்கியதைத் தவிர்க்க முடியவில்லை. வியாபாரமில்லாமல் மீனாட்சியம்மன் சுற்றியுள்ள வீதிகளில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டன. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், ஓரளவு பெரிய வணிக நிறுவனங்கள், நஷ்டத்திலும் தொடர்ந்து கடைகளை நடத்திக் கொண்டிருக்கின்றன. வரும் தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் உள்ளிட்ட அடுத்தடுத்த பண்டிகை நாட்களை வைத்துச் சமாளித்துவிடலாம் என்று நிறுவனங்களைத் திறந்து வியாபாரத்தைத் தொடங்கிவிட்டனர். ஆனாலும், இந்தப் பெரிய நிறுவனங்களுக்கே வாடிக்கையாளர்கள் வருகை பல மடங்கு வீழ்ச்சியடைந்துள்ளது.

முன்புபோல் வாடிக்கையாளர்கள் வருகையில்லாமல் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாமல் இந்த நிறுவனங்கள் திணறிக் கொண்டிருக்கின்றன. அதனால், மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் உள்ள பெரிய வணிக நிறுவனங்களே வாடகைக்குக் கட்டுப்பாடியாகாமல் மதுரை கே.கே.நகர், அண்ணா நகர், மாட்டுத்தாவணி பகுதிகளுக்கு இடம்பெயரலாமா என்று ஆலோசித்துக் கொண்டிருக்கின்றனர். சிறு, குறு நிறுவனங்கள், நடுத்தர வர்த்தக நிறுவனங்கள் பல, தங்கள் கடைகளைக் காலி செய்துவிட்டு அண்ணா நகர், கே.கே.நகர் பகுதிகளுக்குத் தற்போதே இடம்பெயர ஆரம்பித்துள்ளன. அதனால், மாசி வீதி, வெளி வீதிகளில் தற்போது ‘டூலெட்’ போர்டுகள் அதிக அளவு தொங்குகின்றன.

இதுகுறித்து மதுரை தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் கூறுகையில், ‘‘மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருகிற கூட்டத்தை வைத்துதான் மாசி வீதி, வெளி வீதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில் வியாபாரம் நடக்கும். தற்போது இந்த வீதிகளில் வாகனங்களை பார்க்கிங் செய்ய முடியவில்லை. கோயிலுக்கு வருவதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. அதனால், கோயிலுக்கு வருகிற பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் கூட்டம், கரோனாவுக்கு முன்பே குறைந்துவிட்டது. தற்போது கரோனா ஊரடங்கால் அதுவும் இல்லாமல் போய்விட்டது.

வெறும் உள்ளூர் மக்களை வைத்து மட்டுமே அங்கு வியாபாரத்தை அந்த வீதிகளில் நடத்த முடியாது. தற்போது மொத்த கொள்முதல் நிறுவனங்களுக்கு வெளி மாவட்டங்கள், வடமாநிலங்களில் இருந்து பொருட்களைக் கொண்டு வரும் கனரக வாகனங்கள், லாரிகளுக்கு போலீஸார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதனால், பொருட்களை மாசி வீதிகள், வெளி வீதிகளில் உள்ள மொத்த வியாபார நிறுவனங்களுக்குக் கொண்டுவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இனி வரும் காலங்களில் சில்லறை வியாபார நிறுவனங்கள் மட்டுமே மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியிருக்கும். தற்போது கரோனாவால் ஒட்டுமொத்த வர்த்தகமும் வீழ்ச்சியடைந்து இருப்பதால் அங்குள்ள நிறுவனங்களைத் தொடர்ந்து செயல்பட முடியாமல் வாடகை குறைவாக உள்ள பை-பாஸ் ரோடு, நகரின் மற்ற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றன. அதனால், தற்போது காளவாசல் அருகே உள்ள மதுரை பைபாஸ் ரோடு தற்போது மீனாட்சியம்மன் கோயில் டவுன் ஹால் ரோடு மாதிரி ஆகிவிட்டது.

காலம், வியாபாரச் சூழலையும், அதன் இடங்களையும் மாற்றும் என்பதுபோல் மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள வணிக நிறுவனங்களும் பார்க்கிங் பிரச்சினை, வாடகை மற்றும் வாடிக்கையாளர்கள் எளிமையாக வந்து செல்வதற்காக இடம்பெயர்வதைத் தவிர்க்க இயலாது, ’’ என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in