Published : 17 Jul 2021 05:16 PM
Last Updated : 17 Jul 2021 05:16 PM

குழந்தைக்குப் பாலியல் தொல்லை; வார்த்தை ஜாலத்தால் குற்றவாளியைக் காப்பாற்றிய அதிகாரிகள்: கண்டித்து தண்டனை அளித்த உயர் நீதிமன்றம்

செமன் என்ற ஆங்கில வார்த்தையை, செம்மண் எனப் பதிவு செய்ததை முறையாக ஆய்வு செய்யாமல், இரண்டு வயதுப் பெண் குழந்தையைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய குற்றவாளியை விடுதலை செய்த போக்சோ நீதிமன்ற உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து தண்டனை வழங்கியது. தீர்ப்பில் கீழமை நீதிமன்றத்துக்கு அறிவுறுத்தலும் வழங்கியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதிக்கு இரண்டு வயதுப் பெண் குழந்தை உள்ளது. கணவன் வெளியூர் சென்றிருந்ததால் தனது குழந்தையைப் பக்கத்து வீட்டு எஸ்.பிரகாஷ் என்பவரிடம் சொல்லி, திண்ணையில் விளையாட விட்டுவிட்டு, உணவு வாங்க தாய் கடைக்குச் சென்று வந்துள்ளார். அவர் திரும்பிய நேரத்தில் குழந்தை திண்ணையில் இல்லாததால், பின்னர் தேடிக் கண்டுபிடித்துள்ளார்.

அப்போது அந்தக் குழந்தை, பிரகாஷ் தன்னை முத்தமிட்டதாக மழலையாகத் தெரிவித்த விசயங்கள் அச்சத்தை ஏற்படுத்தியதால், குழந்தையின் உடல் மற்றும் உடைகளை தாய் சோதித்துள்ளார். அப்போது, குழந்தையின் பிறப்புறுப்பில் உயிரணுக்கள் (செமன்) படிந்திருந்தது தெரியவந்தது. இதைக் கணவனுக்குத் தெரியப்படுத்தியதுடன், அக்கம் பக்கத்தினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

இரண்டு நாட்கள் கழித்து குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்த மருத்துவர், உடனடியாகக் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வடுவூர் காவல் நிலைய போலீஸார் பதிவு செய்த வழக்கு, மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அந்த நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், புகார் அளிப்பதில் தாமதம், மருத்துவ ஆதாரங்கள் முழுமையாக இல்லை, பிறப்புறுப்பில் செம்மண் மட்டுமே படிந்திருந்தது போன்ற காரணங்களைக் கூறி பிரகாஷை விடுதலை செய்து 2018ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து குழந்தையின் தாய் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நீதிபதி பி.வேல்முருகன் முன் நடைபெற்றது. பின்னர் அவர் தீர்ப்பளித்தார். அவரது தீர்ப்பில், காவல்துறையை நாடி புகார் அளிப்பதில் தாமதம் மற்றும் வழக்கில் குறிப்பிடப்படும் வார்த்தைகளில் உள்ள தவறுகள் ஆகிய காரணங்களால் குற்றவாளிகள் தப்பித்து விடுகின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

போக்சோ சட்டத்தின் நோக்கம் மற்றும் எல்லையை முழுமையாக உணராமல் கீழமை நீதிமன்றம் வழக்கை விசாரித்து தீர்ப்பளித்துள்ளது. மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை எவ்வாறு சாட்சியமளிக்க முடியும் என்பதை உணராமலும், அந்தக் குழந்தையின் தாயின் மனநிலையை உணராமலும் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

காவல்துறை விசாரணையின்போது தாய் அளித்த வாக்குமூலத்தில் குழந்தையின் பெண்ணுறுப்பில் ஆண் உயிரணுக்கள் படிந்திருந்தது என்று வாக்குமூலம் அளித்திருந்த நிலையில், அதன் ஆங்கில வார்த்தையை செமன் (semen) என்று குறிப்பிடுவதற்கு பதிலாக செம்மண் (semman) என்று தட்டச்சு செய்யப்பட்டதை, குற்றவாளி செம்மண் நிறத்திலான பொருள் எனத் தனக்கு ஆதரவாக எடுத்துக்கொண்டு, ஆதாரம் இல்லை என வாதிட்டுள்ளார். தமிழ் வார்த்தையை ஆங்கிலத்தில் எழுதியதால் வழக்கின் போக்கையே மாற்றிய குற்றவாளியைத் தப்பிக்க விட்டுள்ளனர்.

கல்வியறிவு குறைவாக உள்ள ஊரகப் பகுதிகளில், இதுபோன்ற சம்பவங்களில், காவல்துறையை நாடுவதில் சற்று சுணக்கம் காட்டுவார்கள். அதை ஒரு காரணமாக வைத்து குற்றத்தில் தொடர்புடைய நபரை விடுவிப்பது ஏற்கமுடியாது என நீதிபதி வேல்முருகன் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணை நீதிமன்றங்கள் தங்களுக்கான அதிகாரத்தின்படி, வழக்குத் தொடர்பான ஆவணங்களைக் காவல்துறையிடமிருந்து பெற்று, முழுமையாக ஆய்வு செய்து மனதைச் செலுத்தி விசாரித்துத் தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இரண்டு வயதுக் குழந்தைக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியாகி உள்ளதால், வழக்கிலிருந்து பிரகாஷ் விடுதலை செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்த நீதிபதி 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான குழந்தைக்கு ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x