

வாழைத் தோட்டத்தில் மரக்கூண்டில் அடைக்கப்பட்டுள்ள ரிவால்டோ யானையை வனத்தில் விடுவிக்க தலைமை வன உயிரினக் காப்பாளர் சேகர்குமார் நீரஜ் உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வாழைத் தோட்டம் மற்றும் மாவனல்லா பகுதியில் 45 வயதுடைய ரிவால்டோ என்ற காட்டு யானை சுற்றித் திரிந்தது. தும்பிக்கையில் ஏற்பட்ட காயம், கண் பார்வைக் குறைபாடு காரணமாக வனப்பகுதிக்குள் செல்லாமல், குடியிருப்புப் பகுதிகளிலேயே நடமாடிய ரிவால்டோ யானை, விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தியது.
கடந்த மே மாதம் 5-ம் தேதி இந்த யானையைப் பிடித்த வனத்துறையினர், அதை கரால் என்னும் மரக்கூண்டில் அடைத்து, 50 நாட்களுக்கும் மேலாக மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், ரிவால்டோ யானையின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்யவும், வனப் பகுதியில் விடுவிப்பதா அல்லது முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமுக்கு அழைத்துச் சென்று பராமரிப்பதா என்பது குறித்தும் ஆய்வு செய்ய தமிழக வன கால்நடைத் துறையின் முன்னாள் உதவி இயக்குநர் மனோகரன் தலைமையில், தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்லைக்கழகப் பேராசிரியர் தர்மசீலன், எஸ்பிசிஏ உறுப்பினர் ரமா, உலகளாவிய வனவிலங்குகள் நிதியம் ஒருங்கிணைப்பாளர் பூமிநாதன், மோகன்ராஜ், ஓசை அமைப்பின் நிறுவனர் காளிதாசன், உதகை அரசு கலைக் கல்லூரி வன உயிரியல் துறை உதவிப் பேராசிரியர் ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர் இன்று மாலை வாழைத் தோட்டத்தில் கராலில் உள்ள ரிவால்டோ யானையை ஆய்வு செய்தனர். ஆய்வு குறித்த அறிக்கையை வனத்துறையினரிடம் சமர்ப்பித்துள்ளனர். அதில் பல்வேறு பரிந்துரைகளைச் செய்துள்ளனர்.
இந்நிலையில், தலைமை வன உயிரினக் காப்பாளர் சேகர்குமார் நீரஜ், கராலில் உள்ள காட்டு யானை ரிவால்டோவை வனத்தில் விட உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பகத் துணை இயக்குநர் ஸ்ரீகாந்த் கூறும்போது, ''தலைமை வன உயிரினக் காப்பாளார் சேகர்குமார் நீரஜ் ரிவால்டோவை வனத்தில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார். இதன்படி ரிவால்டோவை மரக்கூண்டிலிருந்து விடுவிக்கப்படுவதற்கு முன்பு அதற்கு ரேடியோ காலர் அணிவிக்கப்படும்.
பின்னர் பிரத்யேக வாகனத்தில் அபயரண்யம் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு சூரிய மின்வேலி அமைக்கப்பட்ட பகுதியில் முதலில் விடுவிக்கப்படும். அந்தப் பகுதியில் யானை பழக்கப்பட்டவுடன், வனத்தில் முழுமையாக விடுவிக்கப்படும். இதற்கான திட்டம் வகுக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படும்'' என்று தெரிவித்தார்.