Published : 17 Jul 2021 04:29 PM
Last Updated : 17 Jul 2021 04:29 PM

உச்ச நீதிமன்ற ஆணையின்படி சிறைவாசிகளுக்குப் பிணை வழங்குக: திருமாவளவன்

திருமாவளவன்: கோப்புப்படம்

சென்னை

உச்ச நீதிமன்ற ஆணையின்படி சிறைவாசிகளுக்குப் பிணை வழங்க வேண்டும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, திருமாவளவன் இன்று (ஜூலை 17) வெளியிட்ட அறிக்கை:

"கரோனா அச்சுறுத்தல் காரணமாக சிறைவாசிகளுக்குப் பிணை வழங்க வேண்டுமென்ற உச்ச நீதிமன்றத்தின் ஆணையை மேலும் காலம் தாழ்த்தாமல் நடைமுறைப்படுத்த வேண்டுமென தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

இந்தியா முழுவதிலுமுள்ள சிறைகளில் இருக்கும் கைதிகளின் உயிருக்கு கரோனாவால் ஏற்பட்டிருக்கும் ஆபத்தைக் கவனத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் தானே முன்வந்து, 2020-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்து விசாரித்தது. கைது நடவடிக்கையை முடிந்தவரை தவிர்க்க வேண்டுமெனவும், மாநில அரசுகள் உயர் அதிகாரக் குழுக்களை அமைத்து, தகுதியான கைதிகளைப் பிணையில் விடுவிக்க வேண்டுமெனவும் ஆணையிட்டது.

அந்த வழக்கை மீண்டும் விசாரித்து 07.05.2021 அன்று சில உத்தரவுகளைப் பிறப்பித்தது. 2020ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மாநில அரசுகளால் நியமிக்கப்பட்ட உயர் அதிகாரக் குழுக்களின் பரிந்துரைகளின்படி பிணை வழங்கப்பட்டவர்கள் அனைவருக்கும் மீண்டும் 90 நாட்களுக்குப் பிணை வழங்க வேண்டுமென்று அந்த உத்தரவில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், நேற்று (ஜூலை 16) மீண்டும் அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தனது ஆணையின்படி பிணை வழங்கப்பட்டவர்கள் எவரையும் இப்போது சிறையில் அடைக்கக் கூடாது, உச்ச நீதிமன்றம் அடுத்து ஆணை பிறப்பிக்கும் வரை அவர்கள் அனைவரையும் தொடர்ந்து பிணையில் இருக்க அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி தமிழக அரசு உயர் அதிகாரக் குழு ஒன்றை அமைத்தது. சிறைத்துறை டிஜிபி, உள்துறை இணைச் செயலாளர், தமிழ்நாடு மாநில சட்ட சேவைகள் ஆணையத்தின் தலைவர் ஆகியோர் அதில் உறுப்பினர்களாக உள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பையா தலைமையில் 19.05.2021ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் கைதிகளுக்குப் பிணை வழங்குவது குறித்து 9 பரிந்துரைகளை அக்குழு அரசுக்கு அளித்தது. ஆனால், அதன்படி எவருக்கும் இதுவரை பிணை வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை.

இதனிடையில், உச்ச நீதிமன்றம் நேற்று இந்த வழக்கில் மேலும் சில ஆணைகளைப் பிறப்பித்துள்ளது. பிணை வழங்குவதில் கைதியின் வயது, அவருக்குள்ள இணை நோய்களின் விவரம் ஆகிய அம்சங்களும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

ஏற்கெனவே தமிழகச் சிறைகளில் உள்ள கைதிகள் நூற்றுக்கணக்கானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், உச்ச நீதிமன்றம் ஆணையிட்டும், உயர் அதிகாரக் குழு பரிந்துரைத்தும் கைதிகளுக்குப் பிணை வழங்காதது ஏன் என்பது புரியவில்லை. இனியும் இதில் காலம் தாழ்த்தாமல் உடனடியாகத் தகுதியான கைதிகளுக்குப் பிணை வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்".

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x