

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மதுரை மத்தியத் தொகுதியில் ஒரு வாக்குச் சாவடியில் உடலுக்கு முடியாமல் ஆம்புலன்ஸில் படுத்த படுக்கையாக வந்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய 86 வயது மூதாட்டியை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று குடும்பத்தோடு சென்று நலம் விசாரித்து, பாராட்டு தெரிவித்துள்ளார்.
அடுத்த தேர்தலிலும் நான் வாக்களிப்பேன் என்று அந்த மூதாட்டி உற்சாகம் பொங்கத் தெரிவித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் பல்வேறு விசித்திர, நெகிழ்ச்சியான, சுவாரசிய நிகழ்வுகள் நடக்கும். அது அந்தத் தேர்தலோடு மறந்துவிடும். ஆனால், அப்படி ஒரு நெகிழ்ச்சியான சம்பவம், மதுரை மத்தியத் தொகுதிக்குப்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் நடந்ததை இன்னும் நினைவு வைத்து, நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சம்பந்தப்பட்டவரை நேரில் குடும்பத்தோடு சென்று பாராட்டியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ஆரப்பாளையம் டி.டி.சாலை பகுதியில் வசித்து வந்தார் ராஜாமணி அம்மாள் (86). முதுமை காரணமாகக் கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில் இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும், அந்த மூதாட்டி வாக்களிக்க விரும்பினார். அவரது விருப்பத்தை நிறைவேற்ற அவரது மகன் ஆம்புலன்ஸில் அவரை ஏற்றிக்கொண்டு ஆரப்பாளையம் தனியார் பள்ளி வாக்குச்சாவடிக்கு அழைத்துச் சென்றார். அங்கு சக்கர நாற்காலியில் மூதாட்டியை அமரவைத்து வாக்களிக்க வாக்குச்சாவடிக்குள் அழைத்துச் சென்றனர்.
பின்னர் அவர் தனது வாக்கைப் பதிவு செய்தார். தள்ளாத வயதிலும் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றிய மூதாட்டி ராஜாமணி அம்மாளைத் தேர்தல் அலுவலர்கள் பாராட்டினர். பொதுமக்கள் மத்தியில் இந்த நிகழ்வு, அப்போது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனை அப்போதே அந்தத் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்ட நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வரவேற்று சமூக ஊடகங்களில் தமது பாராட்டைத் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் அவர் நிதி அமைச்சரான பின்னர் அதை மறக்காமல் அந்த மூதாட்டியை நேரில் சென்று பாராட்டத் திட்டமிட்டார். தற்போது அந்த ராஜாமணி பாட்டி எஸ்.எஸ்.காலனி பகுதியில் வசித்து வருகிறார். அவரை இன்று காலை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தன் குடும்பத்தினருடன் நேரில் சந்தித்தார். முதுமையால் உடல்நலம் பாதிக்கப்பட்டும், ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியதற்காகத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், கரோனா காலகட்டம் என்பதால் அப்போது வந்து நேரில் நன்றி தெரிவிக்க முடியவில்லை என்றும் அமைச்சர் கூறினார். அவரிடம் பேசிய ராஜாமணி அம்மாள், அடுத்த தேர்தலிலும் ஓட்டு போட வருவேன் எனத் தெம்பாகக் கூறி அமைச்சரிடம் உற்சாகமாகப் பேசி நன்றி தெரிவித்தார்.
வயது முதிர்வைக் காரணம்காட்டி வீட்டிலேயே முடங்கி விடாமல், தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய ராஜாமணி பாட்டி, தற்போதைய இளம் தலைமுறை வாக்காளர்களுக்கு ஒவ்வொரு வாக்கின் முக்கியத்துவத்தையும் உணர்த்தியுள்ளதாக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
மனைவியின் இறப்பைக் கூடப் பொருட்படுத்தாமல் வாக்களித்த முதியவருக்கும் அமைச்சர் நேரில் ஆறுதல்
மதுரை மேலவாசல் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (65), இவரது மனைவி காளியம்மாள். கடந்த தேர்தல் வாக்குப் பதிவு நாளன்று காளியம்மாள் எதிர்பாராத விதமாக மறைந்து விட்டார். மனைவிக்கு இறுதிச்சடங்கு செய்யும் கடமையைக் காலம் தாழ்த்திவிட்டு, முதலில் சென்று வாக்களித்த பழனிசாமியையும் அமைச்சர் பாராட்டினார்.