Last Updated : 17 Jul, 2021 02:58 PM

 

Published : 17 Jul 2021 02:58 PM
Last Updated : 17 Jul 2021 02:58 PM

மேகதாது; மத்திய அரசுக்கு அதிகாரமோ, உரிமையோ கிடையாது: விவசாயிகள் சங்கம் கண்டனம்

மேகதாதுவில் சட்டவிரோதமாக அணை கட்டி காவிரி டெல்டாவினைப் பாலைவனமாக்க முயற்சிக்கும் கர்நாடக அரசையும், அதற்குத் துணைபோகும் மோடி தலைமையிலான பாஜக அரசையும் கண்டிப்பதாகக் கூறி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு இன்று காலை (17-ம் தேதி) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே.பக்கிரிசாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளரும், எம்எல்ஏவுமான எம்.சின்னத்துரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசையும், கர்நாடக அரசையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பெ.சண்முகம் கூறியதாவது:

’’காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு மாறாகவும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு விரோதமாகவும், கர்நாடக மாநில அரசு மேகதாதுவில் அணைகட்ட ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது. உச்ச நீதிமன்றம் சொன்னாலும் நடுவர் மன்றம் சொன்னாலும் நாங்கள் எதையும் கேட்க மாட்டோம் என்று கர்நாடக மாநில முதல்வரும் மற்ற அமைச்சர்களும் தொடர்ந்து பேசி வருகின்றனர். இது வரம்பு மீறிய செயலாகும்.

மத்திய அரசாங்கமும் மேகதாதுவில் அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை ஆய்வு செய்ய அனுமதி கொடுத்துள்ளது. இது வன்மையான கண்டனத்துக்குரியது.

இந்த நிலையில் கர்நாடக அரசு அனுமதி கேட்டிருந்தாலும், எல்லா விதமான அதிகாரமும் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு வழங்கப்பட்ட நிலையில், மத்திய அரசாங்கம் ஆய்வு செய்வதற்கான அனுமதியை வழங்கியது சட்டத்துக்கு விரோதமான ஒன்று. தமிழக‌ அனைத்துக் கட்சித் தலைவர்கள், மத்திய நீர்வளத் துறை அமைச்சரைச் சந்தித்துப் பேசியபோது, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டுதான் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அப்படியான ஒரு அனுமதியை வழங்க மத்திய அரசுக்கு அதிகாரமோ, உரிமையோ கிடையாது. நீதிமன்றத்தில் காவிரி இறுதித் தீர்ப்பில் எல்லா விதமான அதிகாரங்களும் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு மட்டுமேதான் உள்ளது எனக் குறிப்பிட்டிருந்தது. இந்த சமயத்தில் கர்நாடக அரசு மத்திய அரசிடம் ஆய்வுக்கான அனுமதியைக் கேட்டிருந்த போதும், மேலாண்மை ஆணையத்தை நாடுமாறு கூறியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல், அதிகாரமில்லாத நிலையில் மத்திய அரசு அனுமதி வழங்கியது கண்டிக்கத்தக்கது. உடனடியாக கர்நாடகாவுக்கு வழங்கிய அனுமதியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.

மேலும், இதுவரை காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தரத் தலைவரை மத்திய அரசு நியமிக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. உடனடியாக நிரந்தரத் தலைவரை நியமிக்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்லும்போது வலியுறுத்த வேண்டும். கர்நாடகா தொடர்ந்து அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விவசாய மற்றும் விவசாய தொழிலாளர் சங்கங்களைத் திரட்டி அடுத்தகட்டமாக மாபெரும் போராட்டம் நடத்தப்படும்’’.

இவ்வாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x