Published : 17 Jul 2021 03:12 AM
Last Updated : 17 Jul 2021 03:12 AM

மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்த தகவல்கள் கடைகோடி மக்களையும் சென்றடைய வேண்டும்: ஊடகப் பிரிவுகளுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் அறிவுறுத்தல்

மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்த தகவல்கள் கடைகோடி மக்களையும் சென்றடைய வேண்டும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு ஊடக பிரிவுகளுக்கு மத்தியஅமைச்சர் எல்.முருகன் அறிவுறுத்தியுள்ளார்.

மத்திய தகவல் ஒலிபரப்பு துறையின் இணை அமைச்சராக எல்.முருகன் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக நேற்று சென்னை வந்தார். அவரை, விமான நிலையத்தில் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தென்மண்டல தலைமை இயக்குநர் வெங்கடேஸ்வர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இதைத் தொடர்ந்து, செய்தி ஒலிபரப்பு அமைச்சக அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில்மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது:

கரோனா தொற்றால் பல்வேறுதுறைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை ஊடக அதிகாரிகள், வாட்ஸ்அப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ஆகியவற்றைப் பயன்படுத்தி மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டுள்ள 5 கிலோ இலவச அரிசி,கோதுமை திட்டத்தின் பயன்கள் குறித்த செய்தியை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும்.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்கவும், மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் மத்திய அரசு எடுத்துள்ள முயற்சிகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

விவசாயிகள், கரோனா பாதிக்கப்பட்டோர் உள்ளிட்ட பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாகபணம் வரவு வைக்கும் முறையால்பயனடைந்தோரின் அனுபவங்கள்குறித்த தகவல்களையும், மத்திய அரசின் மின்னணு ஊடகங்கள் செய்தி வெளியிட வேண்டும்.

தமிழகத்தின் வரலாறு, பாரம்பரியம், மொழியின் தொன்மை குறித்த புத்தகங்களை தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் புத்தக வெளியீட்டு பிரிவு அதிக அளவில் வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் மா.அண்ணாதுரை, இயக்குநர் குருபாபு பலராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x