

சமூக சேவகர் பாலம் கல்யாண சுந்தரம், டாக்டர் கமலா செல்வராஜ், பத்மஸ்ரீ விருது பெற்ற விவசாயி வெங்கடபதி உள்பட 9 பேருக்கு ‘ஜேப்பியார் ஐகான் விருதுகள்’ வழங்கப்பட்டன. கல்வி, மருத்துவம், விவசாயம், பொழுதுபோக்கு, சமூக சேவை உள்ளிட்ட துறைகளில் சாதனை புரிந்தோருக்கு ஜேப்பியார் பொறியியல் கல்லூரியின் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் சார்பில் ஆண்டுதோறும் ‘ஜேப்பியார் ஐகான் விருதுகள்’ வழங்கப்படுகின்றன. கடந்த 3 ஆண்டுகளாக இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டுக்கான ஜேப்பியார் ஐகான் விருதுக்கு சமூக சேவ கரும் அன்பு பாலம் அமைப்பின் நிறுவனருமான ‘பாலம்’ கல்யாண சுந்தரம் (வாழ்நாள் சாதனையாளர் விருது), ‘தி இந்து’ வர்த்தக தலைவர் ஷங்கர் வி.சுப்ரமணியம் (அச்சு ஊடகம்), பத்மஸ்ரீ விருது பெற்ற விவசாயி டி.வெங்கடபதி ரெட்டியார் (தோட்டக்கலை), ஜி.ஜி. மருத்துவமனை இணை இயக்குநர் டாக்டர் கமலா செல்வராஜ் (சுகாதார நலன்), அபிராமி திரையரங்கம் செயல் இயக்குநர் நல்லம்மை ராமநாதன் (பொழுதுபோக்கு), வெக்சல் கல்வி அறக்கட்டளை நிறுவனர் வசுதா பிரகாஷ் (கல்வி), பூமி அமைப்பின் நிறுவனர் கே.கே.பிரகலாதன் (என்ஜிஓ), அவ்தார் கேரியர் கிரியேட்டர்ஸ் நிறுவனர் சவுந்தர்யா ராஜேஷ், நேச்சுரல்ஸ் சலூன் மற்றும் ஸ்பா தலைமைச் செயல் அலுவலர் குமாரவேல் ஆகிய 9 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பொன்னாடை
தேர்வானவர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று நடை பெற்றது. ஜேப்பியார் கல்விக் குழும தலைவரும், சத்யபாமா பல்கலைக்கழக வேந்தருமான ஜேப்பியார், சாதனையாளர்கள் 9 பேருக்கும் பொன்னாடை அணிவித்து ஜேப்பியார் ஐகான் விருதுகளை வழங்கினார். அப் போது கல்லூரியின் இயக்குநர் எம். ரெஜினா ஜேப்பியார், முதல்வர் சத்யபாமா ஆகியோர் உடனிருந்தார்.
சமூக சேவகர் பாலம் கல்யாண சுந்தரம் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றபோது, அரங்கில் அமர்ந்திருந்த அனைவருமே எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். விழாவில் ஜேப்பியார் பேசும்போது கூறியதாவது:
உதவ வேண்டும்
சமுதாயத்தின் பல்வேறு துறை களில் சாதனை புரிந்தோருக்கு விருதுகளை வழங்கி கவுரவித் துள்ளோம். இதற்காக நாங்கள் பெருமை கொள்கிறோம். சமுதாயத் துக்கு பல்வேறு வழிகளில் உதவி செய்துள்ள இந்த சாதனை யாளர்களை மாணவர்கள் பின்பற்ற வேண்டும். வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பது முக்கியம் அல்ல. சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டு ஏழை எளியவர்களுக்கு உதவ வேண்டும். எல்லோருமே ஏதாவது ஒரு வழியில் மற்றவர்களுக்கு உதவி செய்ய முடியும். இவ்வாறு ஜேப்பியார் கூறினார்.
விருது பெற்றவர்கள், தங்கள் வாழ்க்கையில் கடந்து வந்த பாதையையும், பணி அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர். வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற பாலம் கல்யாண சுந்தரம் ஏற்புரை யாற்றிப் பேசும்போது, “எனக்கு கிடைத்திருக்கும் புகழுக்கு எல்லாம் ஒரே காரணம் எனது தாயார் சொன்ன அறிவுரையை பின்பற்றி வருவதுதான். பேராசைப் படாதே, சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை ஏழைகளுக்கு கொடுத்து உதவு, தினமும் ஏதாவது ஓர் உயிருக்கு உதவி செய் என்பதுதான் அந்த எளிய அறிவுரை” என்றார்.