Published : 17 Jul 2021 03:13 AM
Last Updated : 17 Jul 2021 03:13 AM

மேகேதாட்டு அணை விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் அறிவுறுத்தல்

மேகேதாட்டு அணை விவகாரத்தில் இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசிதரூர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

மத்திய பாஜக அரசின் தவறான ஆட்சி, தவறான நிர்வாகம் காரணமாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. சமீபத்தில் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்ததேர்தல் முடிவடைந்ததில் இருந்து 10 வாரங்களில் 40 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இதுகுறித்து கேள்வி எழுப்புவோம்.

ஆக்சிஜன் சிலிண்டர் கிடைக்காமல் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அவதிப்பட்டது, விவசாயிகள் பிரச்சினை போன்றவை குறித்தும் குரல் எழுப்ப உள்ளோம். பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய நுகர்பொருட்கள் மீதான ஜிஎஸ்டிவரியை குறைக்க வேண்டும். வேலைவாய்ப்பின்மை சதவீதம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பால் இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதற்கும், மத்திய அரசின் நிர்வாக திறமையின்மைதான் காரணம்.

ஒரு மாநிலத்தை பிரிக்க வேண்டும்என்பது அந்த நாட்டின் அரசியல் இயக்கங்கள் மற்றும் மக்கள் முடிவுசெய்ய வேண்டிய விஷயம். கொங்குநாடு விவகாரத்தை பொருத்தவரை அரசியல் இயக்கங்கள், மக்களின் ஆதரவு இல்லை. கொங்குநாடு என்றகேள்வி தமிழகத்தில் எழவில்லை. எனவே, அதைப் பற்றி விவாதிக்கவேண்டிய அவசியம் இல்லை.

மேகேதாட்டு அணை விவகாரம்இரு மாநிலங்கள் இடையிலான பிரச்சினை. இந்த பிரச்சினையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை மாநில தலைவர் தெளிவுபடுத்தி உள்ளார். பொதுவாகவே இரு மாநிலங்கள் இடையிலான பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும். அந்த அடிப்படையில் மேகேதாட்டு பிரச்சினைக்கும் தீர்வு காணப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சந்திப்பின்போது, காங்கிரஸ் அகில இந்திய செயலாளர் வல்லபிரசாத், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, விஜய் வசந்த் எம்.பி. மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x