

குத்தாலம் அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாஜக பிரமுகர் மீது போலீஸில் புகார் அளித்த சிறுமியின் தந்தை உட்பட 2 பேர் கத்தியால் குத்தப்பட்டனர். இதுதொடர்பாக, பாஜகபிரமுகரின் 2 மகன்கள் உட்பட 5 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தை அடுத்த கோழிகுத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம்(60). பாஜகவின் மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய பொதுச்செயலாளரான இவர், 7 சிறுமிகளிடம் தனது செல்போனில் உள்ள ஆபாச புகைப்படங்களை காட்டி பாலியல் தொல்லை அளித்து மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஒரு சிறுமியின் பெற்றோர், மயிலாடுதுறை மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், மகாலிங்கத்தின் மீது போக்ஸோ, கொலை மிரட்டல் பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, ஜூலை 11-ம் தேதி அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் புகார் அளித்த ஒரு சிறுமியின் தந்தையை நேற்று முன்தினம் இரவு மகாலிங்கத்தின் மகன்கள் ஜவகர், சுதாகர் மற்றும் சிலர் சேர்ந்து, கத்தி மற்றும் கம்பால் தாக்கினர். அதை தடுக்க வந்த மற்றொருவரையும் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினர். படுகாயமடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு, மயிலாடுதுறை மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுதொடர்பாக குத்தாலம் போலீஸார் வழக்குப்பதிவுசெய்து, ஜவகர், சுதாகர், இளஞ்சேரன், சுரேஷ்குமார், பாலாஜி ஆகியோரை கைது செய்தனர்.